தேசிய அரசியலில் தேஜஸ்வி யாதவ்! கேரளா, தமிழகத்தை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு!
கேரளா, தமிழ்நாட்டை தொடர்ந்து மேற்கு வங்க தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள RJD கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ்
2026-ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது அனல் பறக்கும் மேற்கு வங்கத் தேர்தலில் இந்தியா (INDIA) கூட்டணிக்கு ஆதரவாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைவர் தேஜஸ்வி யாதவ் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். பீகாரின் எதிர்க்கட்சித் தலைவரான இவர், நாடு தழுவிய அளவில் பாஜகவுக்கு எதிரானக் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியாக இந்தச் சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தனது ஆதரவைத் தெரிவித்த பிறகு, தேஜஸ்வி யாதவ் தற்போது மேற்கு வங்காளத்தில் முகாமிட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் (TMC) தலைவரும் முதலமைச்சருமான மமதா பானர்ஜிக்கு ஆதரவாக அவர் பல பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவதை உறுதி செய்ய, மேற்கு வங்கத்தின் முக்கியத் தொகுதிகளில் அவர் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
கேரளாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ஆர்ஜேடி கட்சி ஆளுங்கட்சியான இடதுசாரி ஜனநாயக முன்னணியில் (LDF) இணைந்து தேர்தலைச் சந்தித்தது. கேரளாவில் ஆர்ஜேடி கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டன. கூத்துப்பரம்பு (பி.கே. பிரவீன்), கல்பற்றா (பி.கே. அனில் குமார்) மற்றும் வ வடகரை (எம்.கே. பாஸ்கரன்) ஆகிய தொகுதிகளில் ஆர்ஜேடி வேட்பாளர்கள் எல்.டி.எஃப் சார்பில் போட்டியிட்டுள்ளனர். கேரளாவில் காங்கிரஸின் 'யுடிஎஃப்' (UDF) கூட்டணிக்கு எதிராகத் தேஜஸ்வி பிரச்சாரம் செய்தது, இந்தியா கூட்டணியின் மாநில அளவிலான முரண்பாடுகளை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாடு இந்தியாவின் வழிகாட்டி! கோவையில் தேஜஸ்வி யாதவ் புகழாரம்!
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக - காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்துத் தேஜஸ்வி யாதவ் பிரச்சாரம் செய்திருந்தார். திராவிட மாடல் மற்றும் சமூக நீதிக்கு ஆதரவாக அவர் ஆற்றிய உரைகள் இளைஞர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றன.
மத்தியில் உள்ள பாஜக அரசின் சர்வாதிகாரப் போக்கை முறியடிக்க, மாநிலக் கட்சிகளின் ஒற்றுமையே அவசியம் எனத் தேஜஸ்வி தனது பிரச்சாரங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். பிப்ரவரி 2026-ல் டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மாநாட்டிற்குப் பிறகு, அவர் ஒரு தேசிய அளவிலான பிரச்சாரகராக உருவெடுத்துள்ளார்.
இதையும் படிங்க: வரலாற்று சாதனை! தமிழகம், மேற்கு வங்க வாக்காளர்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் பாராட்டு!