×
 

ஈரான் புதிய ஆட்சியாளராக கமேனியின் மகன் தேர்வு! உச்ச தலைவராகிறார் மொஜ்தபா!!

அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் கமேனி கொல்லப்பட்ட நிலையில், அவரது மகன் மொஜ்தபா, ஈரான் புதிய ஆட்சியாளர் மற்றும் மத குருவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தெஹ்ரான்: அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய பெரும் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவரும் மதகுருவுமான அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட நிலையில், அவரது மகன் மொஜ்தபா கமேனி நாட்டின் புதிய உச்ச தலைவராகவும் மதத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது ஈரானின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான திருப்பமாகக் கருதப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தபடி, அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் தொடங்கியது. இதில் கமேனி தலைமையிலான முக்கிய இலக்குகள் தாக்கப்பட்டன. கமேனியின் அலுவலகத்தில் நடந்த துல்லியத் தாக்குதலில் அவர் உயிரிழந்தார். 

அவரது மனைவி, மகள், பேரக்குழந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் பலர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்து ஒரு வாரம் நீடிக்கும் என அமெரிக்கா அறிவித்தது. ஈரான் பதிலடி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இதையும் படிங்க: ரத்த வெறி கொண்ட பயங்கரவாத ஆட்சி! ஆயுதங்களை கீழ போடுங்க!! ஈரானை எச்சரிக்கும் அதிபர் ட்ரம்ப்!

கமேனி கொல்லப்பட்ட பின்னர், ஈரானின் அரசியலமைப்பின்படி இடைக்கால ஆட்சியாளராக அயதுல்லா அலிரேசா அராபி தலைமையிலான கவுன்சில் நியமிக்கப்பட்டது. இந்தக் கவுன்சில் நாட்டை தற்காலிகமாக வழிநடத்தியது. பின்னர், நிபுணர்கள் சபை (Assembly of Experts) விரைவாகக் கூடி, மொஜ்தபா கமேனியை புதிய உச்ச தலைவராகத் தேர்வு செய்தது. இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) இதில் முக்கிய பங்கு வகித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1969ஆம் ஆண்டு மஷ்ஹத் நகரில் பிறந்த மொஜ்தபா கமேனி, இதுவரை எந்த அதிகாரபூர்வ பதவியும் வகிக்கவில்லை. ஆனால், தந்தையின் நிழலில் இருந்து பெரும் செல்வாக்கு செலுத்தி வந்தார். ஈரான்-ஈராக் போரில் ஆயுதப் படையுடன் சேர்ந்து போராடியவர். 

அமெரிக்கா 2019இல் அவர்மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. இப்போது அவர் ஈரானின் மிக உயரிய பதவிக்கு வந்துள்ளது, குடும்ப ஆட்சி போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது நாட்டுக்குள் சிலரிடம் அதிருப்தியை ஏற்படுத்தலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்த மாற்றம் ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரான் தற்போது போர்நிலையில் உள்ளது. புதிய தலைவர் மொஜ்தபா எப்படி நாட்டை வழிநடத்தப் போகிறார் என்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: ஈரானின் தொடர் தாக்குதலால் பலத்த சேதம்!! மூடப்பட்டது சவுதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share