#BREAKING: பேரதிர்ச்சி... கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு... காற்றில் கரைந்த கவிச் சிகரம்...!
தமிழ் இலக்கிய உலகின் அழியாத நட்சத்திரங்களில் ஒன்றாகப் பொலிந்து நின்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன், இன்று காலமானார். அவருக்கு வயது 92.
1933 செப்டம்பர் 28 அன்று, ஈரோடு மாவட்டத்தின் சென்னிமலை என்ற சிறிய ஊரில் பிறந்தவர் ஈரோடு தமிழன்பன், ந. ஜெகதீசன் என்பது அவருடைய இயற்பெயர். பின்னர் அவரது பெயருக்கு இணைந்து 'ஈரோடு' என்று அழைக்கப்பட்டது போல், அவரது வாழ்க்கையும் தமிழின் அடிமரங்களைத் தழுவி வளர்ந்தது. கல்லூரி நாட்களில் தமிழன்பன் என்ற புனைபெயருடன் கவிதைகளைத் தொடங்கிய அவர், பின்னர் மு. கருணாநிதியின் தலைமையிலான கவியரங்குகளில் பங்கெடுத்தபோது, 'ஈரோடு தமிழன்பன்' என்று அழைக்கப்பட்டு, அது அவரது அடையாளமாக மாறியது.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் 'இசை அமுதம்' மற்றும் 'அழகின் சிரிப்பு' போன்ற நூல்கள் அவரது மனதில் தீ மூட்டின.அந்தத் தீ, அவரை மரபுக்கவிதையிலிருந்து புதுக்கவிதையின் கரையை அடையச் செய்தது. வானம்பாடி இயக்கத்தின் தாக்கத்தில், அவர் தமிழ்க் கவிதையின் பாலமாக நின்றார்.
ஈரோடு தமிழன்பன் என்பது வெறும் கவிஞரின் பெயர் அல்ல. அது ஒரு பன்முகப் படைப்பின் சின்னம். ஆசிரியராக, சிறுகதை ஆசிரியராக, நாவல் ஆசிரியராக, நாடக ஆசிரியராக, சிறார் இலக்கியப் படைப்பாளியாக, வாழ்க்கை வரலாற்றாசிரியராக, திறனாய்வாளராக, கட்டுரையாளராக, ஓவியராக, சொற்பொழிவாளராக அவர் தமிழின் ஒவ்வொரு இணுக்குகளிலும் பயணித்தார். ஜப்பானிய கவிதை வடிவங்களான ஹைக்கூ மற்றும் சென்ரியூவைத் தமிழில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் அவர். ஆயிரம் அரங்குகளைத் தொட்ட கவியரங்கக் கவிஞராக, அவரது சொற்கள் கூட்டங்களைச் சிலிர்க்க வைத்தன.
இதையும் படிங்க: நாளுக்கு நாள் மோசமாகும் தலைநகர் டெல்லி..!! காற்றின் தர குறியீடு எவ்ளோ தெரியுமா..??
இவரின் கவிதைத் தொகுப்பான "வணக்கம் வள்ளுவ" நூலுக்காக 2004-ல் சாகித்ய அகாடமி விருது பெற்றவர். இந்த நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக தனது 92 வயதில் ஈரோடு தமிழன்பன் மறைந்தார். அவரது மறைவுக்கு பலதரப்பட்ட மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இன்னும் அடங்கல... மோடி அரசின் தொழிலாளர் விரோத போக்கு..! முறியடிச்சே ஆகணும்... திருமா உறுதி...!