×
 

' ஆப்ரேஷன் ஸ்பெஷலிஸ்ட்' பயங்கரவாதிகளின் சதித்திட்டத்தை முறியடித்த ஐ.பி.எஸ்!! யார் இந்த சந்தீப் சக்கரவர்த்தி?!

பயங்கரவாதிகளின் மிகப்பெரிய சதி முறியடிக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருந்த சந்தீப் சக்கரவர்த்தி என்ற ஐபிஎஸ் அதிகாரிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கு பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்து ஒட்டிய போஸ்டர் விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் தீவிர விசாரணை நடத்தியது, டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு சதியை முறியடிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்த விசாரணைக்கு தலைமை தாங்கிய ஸ்ரீநகர் மூத்த எஸ்பி (எஸ்எஸ்பி) சந்தீப் சக்கரவர்த்தி என்ற ஐபிஎஸ் அதிகாரிக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

காஷ்மீரில் பயங்கரவாதிகள் போஸ்டர் ஒட்டி படையினரை மிரட்டுவது வழக்கமான ஒன்று. ஆனால், இம்முறை 2014 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான சந்தீப் சக்கரவர்த்தி இதை சாதாரணமாக விடவில்லை. பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களை சுட்டுக்கொன்ற “ஆப்பரேஷன் மகாதேவ்” நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய இவர், போஸ்டர் பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடிக்க உத்தரவிட்டார். இதில் போஸ்டர் ஒட்டிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பயங்கரவாத நெட்வொர்க்கின் பின்னணி அம்பலமானது.

இந்த விசாரணை டெல்லி, ஹரியானா, உத்தரப் பிரதேசம் வரை நீண்டது. இதன் விளைவாக 2900 கிலோ வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டது. டாக்டர்கள் உட்பட பல பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இது ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய சதியை முறியடித்தது. இல்லாவிட்டால், டெல்லி குண்டுவெடிப்பைப் போல பல தாக்குதல்கள் நடந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 2900 கிலோ வெடிமருந்து! இந்தியாவுக்கு எதிராக களமிறங்கும் டெல்லி டாக்டர்கள்!! அதிர வைக்கும் 2 சம்பவங்கள்!

சந்தீப் சக்கரவர்த்தி ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை ராம் கோபால் ராவ் ஆந்திர அரசு மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாயார் ரங்கம்மா சுகாதாரத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சந்தீப் கர்னூல் மாவட்டத்தில் உள்ள மான்டசரி பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். 2010 ஆம் ஆண்டு கர்னூல் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார். 2010-2011 வரை பயிற்சி மருத்துவராக பணியாற்றினார். பின்னர் 2014 ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றார்.

காஷ்மீரில் உரி, சோபோர், பாரமுல்லா, ஸ்ரீநகர் தெற்கு, ஹன்ட்வாரா, குப்வாரா, குல்காம், ஆனந்த்நாக் போன்ற பதற்றம் நிறைந்த இடங்களில் எஸ்பி ஆக பணியாற்றியுள்ளார். கடந்த ஏப்ரல் 2021 முதல் ஸ்ரீநகர் எஸ்எஸ்பி ஆக உள்ளார். ஆனந்த்நாக், குப்வாரா, குல்காம் போன்ற இடங்களில் பல பயங்கரவாத அச்சுறுத்தல்களை முறியடித்தார். போலீசார் மற்றும் மக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்தினார்.

“ஆப்ரேஷன் ஸ்பெஷலிஸ்ட்” என்ற பெயர் இவருக்கு உண்டு. திட்டமிடுதல், உடனடி மற்றும் ஆக்கப்பூர்வ நடவடிக்கை இவரது பாணி. போஸ்டர் விவகாரம் அதற்கு உதாரணம். சிறிய அச்சுறுத்தலாக தெரிந்தது, ஜெய்ஷ் சதி வரை சென்றது. பயங்கரவாத எதிர்ப்புக்காக ஜனாதிபதியின் போலீஸ் பதக்கம் 6 முறை, ஜம்மு-காஷ்மீர் போலீஸ் பதக்கம் 4 முறை, இந்திய ராணுவ பதக்கம் ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

இந்த வெற்றி, இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பின் விழிப்புணர்வை காட்டுகிறது. சந்தீப் சக்கரவர்த்தியின் தலைமை, பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.
 

இதையும் படிங்க: ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தம்... அள்ளாடும் மக்கள்... விளாசிய EPS...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share