ஜெர்மனி பிரதமர் மெர்ஸ் இந்தியா வருகை! பிரதமர் மோடியுடன் இன்று முக்கிய பேச்சுவார்த்தை!
ஜெர்மனி பிரதமர் ஃபிரடெரிக் மெர்ஸ் இந்தியா வந்துள்ள நிலையில், பிரதமர் மோடியுடன் முக்கியத் துறைகள் குறித்து இன்று விரிவான பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
ஜெர்மனி பிரதமர் ஃபிரடெரிக் மெர்ஸ் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் வந்தடைந்த அவரை, மாநில ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் மற்றும் உயர் அதிகாரிகள் மலர்க்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வந்துள்ள மெர்ஸ், ஜெர்மனி பிரதமராகப் பதவியேற்ற பிறகு இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வப் பயணம் இதுவாகும். கடந்த ஆண்டுடன் இந்தியா-ஜெர்மனி இடையேயான ‘மூலோபாயக் கூட்டாண்மை’ 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இந்தப் பயணம் இரு நாட்டு உறவில் மிக முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
இன்றைய பயணத் திட்டத்தின்படி, பிரதமர் மோடியும், பிரதமர் மெர்ஸும் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்த உள்ளனர். அதனைத் தொடர்ந்து, சபர்மதி ஆற்றங்கரையில் நடைபெற்று வரும் சர்வதேசப் பட்டம் விடும் திருவிழாவிலும் இரு தலைவர்களும் பங்கேற்கின்றனர். பின்னர் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் இரு நாடுகளுக்கும் இடையேயான உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் வர்த்தகம், முதலீடு, பசுமை மற்றும் நிலையான வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பு, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி போன்ற முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: “புதிய ஆற்றல்... பொலிவான பாரதம்!” - நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவரும், பிரதமரும் புத்தாண்டு வாழ்த்து!
குறிப்பாக, இந்தியத் தொழில்துறையினருடன் இணைந்து செயல்பட ஜெர்மனியின் சீமென்ஸ் மற்றும் ஏர்பஸ் போன்ற முன்னணி நிறுவனங்களின் உயர் அதிகாரிகளும் இந்தப் பயணத்தில் மெர்ஸுடன் வந்துள்ளனர். வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதுடன், இந்தியத் தொழிலாளர்களை ஜெர்மனியில் பணியமர்த்துவது மற்றும் மாணவர்களுக்கான கல்வி வாய்ப்புகள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அகமதாபாத் பயணத்தைத் தொடர்ந்து, பிரதமர் மெர்ஸ் இந்தியாவின் தொழில்நுட்பத் தலைநகரான பெங்களூருவிற்கும் செல்லத் திட்டமிட்டுள்ளார். இந்தப் பயணம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியா மேற்கொள்ள விரும்பும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒரு வலுவான அடித்தளமாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: “இந்தியா இப்போ ‘ரீஃபார்ம் எக்ஸ்பிரஸ்’!” உலகமே உற்றுப்பார்க்கும் 2025 டாப் சாதனைகள் - பிரதமர் மோடி பெருமிதம்!