பாஜகவோடு நெருங்கும் சசிதரூர்..! காங். பட்டியலில் இல்லாதபோதும் 7 கட்சி குழுவில் இடம் பெற்றது எப்படி?
காங்கிரஸ் கட்சி மத்திய அரசுக்கு அனுப்பிய பட்டியலில், பெயரே இடம் பெறாத சசி தரூர் 7 கட்சி குழுவில் இடம் பெற்றது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூர், தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் மனநிலை ஆகியவற்றை வெளிப்படுத்த நட்பு நாடுகளுக்கும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள நாடுகளுக்கு விளக்கம் அளிக்க 7 கட்சி எம்.பி.க்கள் குழுவை மத்திய அரசு அனுப்புகிறது. இந்த குழுவில் இடம் பெற காங்கிரஸ் கட்சி மத்திய அரசுக்கு அனுப்பிய 4 எம்.பி.க்களும் இடம் பெறவில்லை, ஆனால், பெயரே இடம் பெறாத சசி தரூர் இந்த குழுவில் இடம் பெற்றது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டியில் “நாங்கள் மத்திய அரசுக்கு அனுப்பிய 4 எம்.பி.க்களில் ஆனந்த் சர்மா, கவுரவ் கோகய், நசிர் ஹூசைன், ராஜா பிரார் ஆகியோர் பெயர் இடம் பெற்றிருந்தது. சசி தரூர் பெயர் இடம் பெறவில்லை.” எனத் தெரிவித்தார். இருப்பினும் மத்திய அரசு எம்.பி.க்கள் குழு பட்டியலை வெளியிட்டபோது, அதில் தன்னுடைய பெயர் இருந்ததைப் பார்த்த சசி தரூர் மத்திய அரசின் அழைப்பை ஏற்பதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
இதையும் படிங்க: பீகாரில் உடையும் காங்கிரஸ்..! ராகுல் பயணத்துக்கு முன்பே.. பாஜகவில் இணையும் 17 முக்கியப்புள்ளிகள்..!
சசிதரூர் பதிவிட்ட கருத்தில் “சமீபத்திய நிகழ்வுகளில் இந்தியாவின் மனநிலை குறித்து தெரிவிக்க 5 முக்கிய நாடுகளுக்கு அனைத்து கட்சி எம்.பிக்கள் கூட்டத்தை வழிநடத்திச் செல்லும் குழுவுக்கு தலைமை ஏற்க எனக்கு அழைப்புவிடுத்த மத்திய அரசால் பெருமைப்படுகிறேன். தேச நலன் சம்பந்தப்பட்டிருக்கும்போது, என் சேவைகள் தேவைப்படும்போது, நான் தேவையில்லாதவனாகக் காணப்பட மாட்டேன். ஜெய் ஹிந்த்!” எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் “காங்கிரஸ் கட்சி சார்பில் 4 எம்.பி.க்களை பரிந்துரை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கோரியிருந்தது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜுவும் காங்கிரஸ் தலைவர் , மக்களவை காங்கிஸ் தலைவரிடமும் பேசியிருந்தார். இவர்களிடம் ஆலோசனை நடத்தியபின் 4 எம்.பி.க்கள் பெயரை மத்திய அரசுக்கு தெரிவித்தோம். இந்த எம்.பி.க்கள் வெளிநாடுகளுக்குச் சென்று தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் மனநிலையை எடுத்துக்கூறுவார்கள் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
அதன்படி ஆனந்த் சர்மா, முன்னாள் மத்திய அமைச்சர் கவுரவ் கோகய், மக்களவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் சயத் நசீர் ஹூசைன், மாநிலங்களவை எம்.பி. ராஜா பிரார் ஆகியோர் பெயரை பரிந்துரை செய்தோம். ஆனால், சசிதரூர் பெயரை பரிந்துரை செய்யவில்லை” எனத் தெரிவித்தார். ஆனால், காங்கிரஸ் கட்சி மத்திய அரசுக்கு அனுப்பிய 4 எம்.பி.க்கள் பெயரும் 7 கட்சி எம்.பிக்கள் குழுவில் இடம் பெறவில்லை. மாறாக காங்கிரஸ் கட்சி பரிந்துரை செய்யாத சசி தரூர் குழுவில் இடம் பெற்று வழிநடத்த உள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு பிரதமர் மோடி குறித்து காங்கிரஸ் கட்சி எம்.பி. சசி தரூர் புகழ்ந்து பேசியிருந்தார். ரஷ்யா உக்ரைன் போரில் இந்தியா எடுத்த நிலைப்பாடு, மோடியின் ராஜதந்திரம் ஆகியவை குறித்து நாடாளுமன்றத்தில் சசி தரூர் பாராட்டி இருந்தார். இதனால் பாஜகவில் சசிதரூர் இணையலாம் என்ற வதந்தி வெளியானது, இதற்கு சசிதரூர் மறுப்புத் தெரிவித்தார். ஆனால், காங்கிரஸ் கட்சி பரிந்துரை செய்த எந்த பெயரும் இல்லாமல், பரிந்துரை பட்டியலில் இல்லாத சசி தரூரை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது சந்தேகத்தை கிளப்புகிறது.
இதையும் படிங்க: CWG 2010 வழக்கு: எங்க மேல தப்பு இல்ல.. மோடி, கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்கணும்.. கெத்தாக நெஞ்சை நிமிர்த்தும் காங்கிரஸ்..!