குஜராத் பாலம் இடிந்து விபத்து.. பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு..!
குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
குஜராத் மாநிலத்தின் ஆனந்த் மாவட்டத்தில் சுமார் 45 ஆண்டுகள் பழமையான பாலம் ஒன்று உள்ளது. வதோதரா நகரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்த இந்த பாலம், 1986இல் கட்டப்பட்டது. மேலும் மாவட்டத்தின் முஜ்பூர் மற்றும் கம்பீரா பகுதிகளையும், சவுராஷ்டிரா பகுதியையும் இந்த பாலம் இணைக்கிறது.
இந்நிலையில், நேற்று காலை 7.30 மணியளவில் இந்த பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால், பாலத்தில் சென்று கொண்டிருந்த பைக், கார் உள்ளிட்ட வாகனங்களும், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களும் மஹிசாகர் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது லாரி ஒன்று அந்தரத்தில் தொங்கியபடி இருந்தது. பாலத்தில் பல அடி உயரத்தில் இருந்து வாகனங்கள் கீழே விழுந்ததால் பலர் காயமடைந்தனர்.
இதையும் படிங்க: இடிந்து விழுந்த பாலம்.. அந்தரத்தில் தொங்கிய லாரி.. குஜராத்தில் பரபரப்பு சம்பவம்..!
இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் நேற்று வரை 9 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது, மேலும் காயமடைந்த 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும், அவர்களில் யாருக்கும் தீவிர சிகிச்சை தேவைப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து, தேசிய பேரிடர் பொறுப்பு படையினர் மற்றும் பிற அமைப்பினர் ஆற்றில் தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக ஆனந்த்-வதோதரா இடையேயான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மிக பழமையான இந்த பாலம் முறையாக பராமரிக்கப்படாததால் தான் இடிந்து விழுந்தது என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். தலைமை பொறியாளர் - வடிவமைப்பு, தலைமை பொறியாளர் - தெற்கு குஜராத் மற்றும் பாலம் கட்டுமானத்தில் நிபுணத்துவம் பெற்ற இரண்டு தனியார் பொறியாளர்கள் அடங்கிய குழுவை அவசரமாக அந்த இடத்திற்குச் சென்று, பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணங்களை ஆராய்ந்து, தொழில்நுட்ப அம்சங்கள் குறித்த முதற்கட்ட அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: தலைமறைவான நெகல் மோடியை தட்டி தூக்கிய அமெரிக்கா.. விரைவில் நாடு கடத்த திட்டம்..