மோடிஜி என்னை காப்பாத்துங்க!! பொய் கேஸ் போட்டு சிக்க வச்சிட்டாங்க! ரஷ்யாவில் இப்படியுமா நடக்குது?
மாணவர் விசாவில் படிப்பதற்காக ரஷ்யா சென்ற குஜராத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர், போலி வழக்கில் சிக்க வைத்து ரஷ்ய ராணுவத்தில் பணியாற்ற கட்டாயப்படுத்தப்பட்டதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் மோர்பியைச் சேர்ந்த சாஹில் முகமது ஹுசைன் என்ற இளைஞர், மாணவர் விசாவில் படிப்பதற்காக 2024-ஆம் ஆண்டு ரஷ்யா சென்றார். ஆனால் அங்கு போலி போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்கப்பட்டு ரஷ்ய ராணுவத்தில் சேர கட்டாயப்படுத்தப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தற்போது உக்ரைன் படைகளிடம் சரணடைந்துள்ள அவர், உக்ரைனில் இருந்து வெளியிட்ட வீடியோவில் இதைத் தெரிவித்துள்ளார்.
வீடியோவில் சாஹில் கூறுகையில், “நிதி மற்றும் விசா சிக்கல்கள் காரணமாக சில ரஷ்யர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. நான் எதுவும் தவறு செய்யவில்லை. ஆனால் போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிக்க வைக்கப்பட்டேன்.
இதையும் படிங்க: ரஷ்யா - உக்ரைன் மோதல் உலகப்போராக மாறும்!! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வார்னிங்!
சிறையில் இருந்து விடுதலை பெற ராணுவத்தில் சேர ஒப்பந்தம் போட வைத்தனர். 15 நாட்கள் பயிற்சிக்குப் பிறகு போர்க்களத்துக்கு அனுப்பினர். அங்கு சென்றதும் உக்ரைன் படைகளிடம் சரணடைந்தேன்” என்று கூறினார்.
மேலும், “ரஷ்யாவுக்கு வரும் இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டும். போலி வழக்குகளில் சிக்க வைத்து ராணுவத்தில் சேர்க்க மோசடி நடக்கிறது. எந்தச் சூழலிலும் ரஷ்ய ராணுவத்தில் சேர வேண்டாம்” என்று எச்சரிக்கை விடுத்தார்.
இந்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் வேண்டுகோள் விடுத்த சாஹில், “அதிபர் புடின் சமீபத்தில் இந்தியா வந்தார். என்னைப் பத்திரமாக மீட்க அவரிடம் பேசுங்கள்” என்று கோரிக்கை வைத்தார்.
உக்ரைன் படைகள் இந்த வீடியோவை சாஹிலின் தாயாருக்கு அனுப்பி, ரஷ்யாவில் இந்தியர்கள் ஏமாற்றப்படுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். சாஹிலின் தந்தை முகமது ஹுசைன் டில்லியில் உள்ள நீதிமன்றத்தில் மகனை மீட்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு பிப்ரவரியில் விசாரணைக்கு வருகிறது.
ரஷ்ய-உக்ரைன் போரில் ரஷ்ய ராணுவத்தில் சிக்கிய இந்தியர்களை மீட்க இந்திய அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் ராணுவத்தில் சேர ஏமாற்றப்படுவதைத் தடுக்க மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ரஷ்யாவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் குடும்பத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் இந்தியர்கள் ரஷ்யாவுக்கு செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையை மீண்டும் வலுப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: டைம் வேஸ்ட் பண்ண விரும்பல!! ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம்?! அதிபர் ட்ரம்ப் அப்செட்!