சூதானமா இருங்க மக்களே... வாட்டி வதைக்கும் வெப்பம்... தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடு...!
வெப்ப நோய் பாதிப்புகளுக்கு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை மையம்(special ward) திறப்பு
ஈரோடு மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வெப்ப நோய் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க ஈரோடு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. கோடைகாலம் தொடங்கியது முதலே ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகி வருகிறது.
ஈரோட்டில் பகலில் அனல்காற்றுடன் வீசும் வெப்பகாற்றால் வாகன ஓட்டிகளும் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருப்பதால் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். அடுத்து வரும் நாட்களில் வெயிலின் அளவு இன்னும் அதிகரிக்க கூடும் என்பதால், வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க ஈரோட்டில் அரசு மருத்துவமனையில், வெப்பநோய் சிகிச்சைக்காக சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. 5 படுக்கைகளுடன் கூடிய இந்த சிகிச்சை பிரிவில் 24 மணி நேரமும் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்..
மேலும் வெயில் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரும் பொதுமக்கள் பழச்சாறு தண்ணீர் அதிகம் அருந்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். வெயிலில் செல்வதால் வெப்ப நோய் பாதிப்புகளாக, தோலில் கொப்பளங்கள், தசை பிடிப்பு, மயக்கம் ஆகியவை ஏற்படலாம் என தெரிவித்த மருத்துவர்கள் இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளை நாடி சிகிச்சை எடுத்து கொள்ள அறிவுறுத்துகின்றனர்.
தீவிர வெப்ப பாதிப்பினால் ஸ்ட்ரோக், சுயநினைவிழப்பு ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான கோமா நிலைக்கு செல்வதற்கான அபாயமும் இருப்பதாக எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: வெப்ப அலை எச்சரிக்கை..!! வட-மத்திய இந்தியாவில் 25ம் தேதி வரை தாக்கம்..!! IMD அப்டேட்..!!
கடும் வெயிலின் வெப்பத்தால் தலை சுற்றல் ,மயக்கம் வருதல் போன்ற நிலை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என கூறியுள்ளனர். இதே போல் அதிக வெப்பம் காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டால் உடல் உறுப்புகள் செயலிழக்கும் நிலை ஏற்படும் எனவும் இது போன்ற நிலை ஏற்பட்டால் முன்னெச்சரிக்கையாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம் எனவும் அரசு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.. .
இதையும் படிங்க: ப்ப்பா...!! வெளில தலை காட்ட முடியல..!! தமிழ்நாட்டில் 12 இடங்களில் சதம் அடித்த வெயில்..!!