இமாச்சலில் பயங்கரம்! மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து! 7 பேர் பலி, 11 பேர் காயம்! பிரதமர் மோடி இரங்கல்!
இமாச்சலில் சம்பா மாவட்டத்தில் ஒரே விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இமாசல பிரதேசத்தில் தனியார் பேருந்து சாலையோரம் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயர சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இமாசல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் இன்று காலை 7.15 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. பைரகார் பகுதியில் இருந்து சம்பா நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பைரகார்-டிஸ்சா சாலையில் உள்ள மலைப்பாதையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
விபத்து ஏற்பட்டதும் பேருந்தில் இருந்த பயணிகள் அலறியதால், அருகில் இருந்தவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தகவல் கிடைத்ததும் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப்படை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
இதையும் படிங்க: மோடி, அமித் ஷாவை அடுத்தடுத்து சந்தித்த சுதீஷ்! மீண்டும் பாஜக கூட்டணிக்கு தாவுகிறதா தேமுதிக?
மீட்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 11 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 6 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலைப்பாதையில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுநரின் தவறு, சாலையின் நிலை அல்லது வாகனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோர விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது அனுதாபத்தை தெரிவித்துள்ள பிரதமர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.
இமாசல பிரதேசத்தின் மலைப்பகுதிகளில் குறுகிய சாலைகள் மற்றும் ஆபத்தான வளைவுகள் அதிகம் உள்ள நிலையில், அங்கு ஏற்படும் சாலை விபத்துகள் பெரும்பாலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில், சம்பா மாவட்டத்தில் ஒரே விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திடீர் போன் கால்! மேற்காசியாவில் பரபரப்பு! பிரதமர் மோடியுடன் நெதன்யாகு நடத்திய முக்கிய ஆலோசனை!