தூங்கிக் கொண்டிருந்த இந்து இளைஞர் எரித்துக்கொலை!! வங்கதேசத்தில் தொடரும் கொடூரம்!!
வங்கதேசத்தில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது.
வங்கதேசத்தில் ஏற்பட்ட அரசியல் கலவரத்தால் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவில் தஞ்சமடைந்த பிறகு, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. ஆனால் அந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. கடந்த சில மாதங்களில் நூற்றுக்கணக்கான வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், இப்போது மீண்டும் ஒரு கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வங்கதேசத்தின் நரசிங்கடி நகரில் நேற்று முன்தினம் இரவு, 25 வயதான சஞ்சல் பவுமிக் என்ற இந்து இளைஞர் தனது கேரேஜுக்குள் உறங்கிக் கொண்டிருந்தபோது, தீ வைத்து எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நரசிங்கடி காவல் கண்காணிப்பாளர் அப்துல்லா அல் ஃபாரூக் கூறுகையில், “சம்பவ இடத்துக்கு அருகில் ஒரு நபர் சந்தேகப்படும் வகையில் நடமாடியது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.
இதையும் படிங்க: வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தொடரும் அநீதி! ஆசிரியர் வீட்டுக்கு தீ வைத்த கும்பல்!
முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்ற பிறகு சிறுபான்மையினர் மீதான வன்முறை தாக்குதல்கள் 2,900-க்கும் மேற்பட்டவை நடந்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
வங்கதேச இந்து, பௌத்த, கிறிஸ்தவ ஒற்றுமை கவுன்சில் தரவுகளின்படி, டிசம்பர் மாதத்தில் மட்டும் 10 கொலைகள், வீடுகள் மற்றும் கோயில்கள் ஆக்கிரமிப்பு, கொள்ளை, மத நிந்தனை தொடர்பான 23 சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்த வன்முறை தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது சர்வதேச அளவில் கவலைக்கு உள்ளாகியுள்ளது.
பிப்ரவரி 12-ம் தேதி வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசு இதுகுறித்து தொடர்ந்து கவலை தெரிவித்து வரும் நிலையில், சர்வதேச சமூகம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இதையும் படிங்க: ஒரே மாதத்தில் 8வது கொலை!! வங்கதேசத்தில் மரண ஓலம்!! இந்துக்களுக்கு தொடர்ந்து அநீதி!!