1000 அடி பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்ததில் 18 பேர் பலி! உயிர்பிழைத்த ஒற்றை நபர்!! அருணாச்சலில் கோரம்!
விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய புத்தேஸ்வர் தீப் என்ற ஒரே ஒரு தொழிலாளி பள்ளத்தாக்கில் இருந்து மேலே ஏறி வந்து செல்போன் மூலம் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இட்டானகர்: அருணாச்சல பிரதேச மாநிலம் அஞ்சாவ் மாவட்டத்தில் கடந்த 8-ம் தேதி நடந்த பயங்கர சாலை விபத்தில் அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தைச் சேர்ந்த 22 தொழிலாளர்கள் சென்ற டிப்பர் லாரி 1000 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் இதுவரை 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள 3 பேரை தேடும் பணி இன்னும் நடந்து வருகிறது.
விடுதி கட்டுமான வேலைக்காக இந்தத் தொழிலாளர்கள் ஹயுலியாங் பகுதிக்கு லாரியில் அழைத்துச் செல்லப்பட்டனர். ஹயுலியாங்-சாக்லகாங் சாலையில் சாக்லகாங்கில் இருந்து 12 கி.மீ. தொலைவில் சென்றபோது, சாலை வளைவில் லாரி நழுவி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டது.
விபத்து நடந்த இடம் மிகவும் ஆபத்தானது மற்றும் மரங்கள் அடர்ந்த பகுதி என்பதால் உடனடியாக யாருக்கும் தெரியவில்லை. போலீசுக்கும் உடனே தகவல் வரவில்லை. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஒரே நபர் புத்தேஸ்வர் தீப் மட்டும் பள்ளத்தாக்கில் இருந்து கஷ்டப்பட்டு மேலே ஏறி வந்து, செல்போனில் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பிறகே மீட்புப் பணி தொடங்கியது.
இதையும் படிங்க: நள்ளிரவில் வெடித்து சிதறிய சிலிண்டர்!! 25 பேர் உடல் கருகி பலியான சோகம்!! கோவா துயரம்!
ராணுவ வீரர்கள், தீயணைப்புத் துறையினர், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் இணைந்து கடும் முயற்சியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ட்ரோன் மற்றும் கயிறுகள் உதவியுடன் தேடியதில் லாரி கண்டுபிடிக்கப்பட்டது. பல உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்து கிடந்தன. உடல்களை மேலே தூக்கி வரும் பணியும் மிகக் கடினமாக உள்ளது.
இந்த விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த வேதனை தெரிவித்தார். தனது சமூக வலைதளப் பக்கத்தில், “அருணாச்சலில் நடந்த விபத்தை அறிந்து, மிகுந்த மன வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.” என்று பதிவிட்டார்.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, பிரதமர் நிவாரண நிதியில் இருந்து, தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் நிவாரண நிதி வழங்கப்படும் என மோடி அறிவித்துள்ளார். விபத்து குறித்த காரணங்களை கண்டறிய, மாநில அரசு சிறப்பு விசாரணை குழு அமைத்துள்ளது.
இதையும் படிங்க: அதிபர் ட்ரம்புடன் போனில் பேசிய மோடி!! வரி மிரட்டலுக்கு நடுவே நடந்த முக்கிய உரையாடல்!