×
 

ஹைதராபாத்தில் டொனால்டு டிரம்ப் அவென்யூ..!! இந்தியா-அமெரிக்க உறவுகளுக்கு புதிய அத்தியாயம்..!!

அமெரிக்க தூதரகத்துக்கு அருகிலுள்ள முக்கிய சாலை ஒன்றுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் ஏ.ரேவந்த் ரெட்டி தலைமையிலான அரசு, அமெரிக்க-இந்திய உறவுகளை வலுப்படுத்தும் வகையில் ஒரு தனித்துவமான முயற்சியை மேற்கொண்டுள்ளது. ஐதராபாத் நகரின் நானக்ராம்குடா பைனான்சியல் டிஸ்டிரிக்டில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்துக்கு அருகிலுள்ள முக்கிய சாலை ஒன்றுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இனி இந்த சாலை ‘டொனால்டு டிரம்ப் அவென்யூ’ என்று அழைக்கப்படும்.

இந்த சாலை மைக்ரோசாப்ட், கூகுள், அமேசான் உள்ளிட்ட பல்வேறு உலகத் தரம் வாய்ந்த அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் அலுவலகங்கள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது. ஐதராபாத் இந்தியாவின் மிக முக்கிய ஐடி மையங்களில் ஒன்றாக விளங்குவதால், இந்த நடவடிக்கை வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் ரேவந்த் ரெட்டி அரசின் பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. 

கடந்த டிசம்பர் 2025-ல் தெலுங்கானா ரைசிங் உச்சி மாநாட்டில் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இந்த அறிவிப்பை முதன்முதலில் வெளியிட்டார். அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு (Freedom 250) கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ID கார்டு விவகாரம்... கொதித்துப் போன அரசியல் கட்சியினர்... அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்..!!

சமீபத்தில் நடைபெற்ற பெயர்ப் பலகை திறப்பு விழாவில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் செர்ஜியோ கோர், துணை முதலமைச்சர் மல்லு பட்டி விக்ரமார்கா உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்வு இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் பலப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முடிவுக்கு டிரம்ப் தனது நன்றியை தெரிவித்துள்ளார். ட்ரூத் சோஷியலில் பதிவிட்ட அவர், “இந்தியாவின் ஐதராபாத்தில் உள்ள ஒரு சாலைக்கு எனது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பெருமையைப் பெறும் முதல் அமெரிக்க ஜனாதிபதி என்ற பெருமை எனக்குக் கிடைத்துள்ளது. ஐதராபாத் மக்களுக்கும் தெலுங்கானா அரசுக்கும் எனது மனமார்ந்த நன்றி” என்று கூறினார்.

இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கருத்துகளுக்கு வித்திட்டுள்ளது. சிலர் இதை இந்தியா-அமெரிக்க பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று வர்ணிக்கின்றனர். ஹைதராபாத் போன்ற நகரங்களில் தொழில்நுட்பத் துறை வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் உலகளாவிய தொடர்புகளை அதிகரிக்கும் வகையில் ரேவந்த் ரெட்டி அரசு தொடர்ந்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

இந்த சாலை பெயர் மாற்றம் அத்தகைய முயற்சிகளுக்கு ஒரு உதாரணமாக அமைந்துள்ளது.ஒட்டுமொத்தத்தில், இந்த முடிவு தெலுங்கானாவை உலகளாவிய முதலீட்டு மையமாக மாற்றும் அரசின் நோக்கத்தை பிரதிபலிக்கிறது. இந்தியா-அமெரிக்க உறவுகள் பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் இராஜதந்திரம் ஆகிய துறைகளில் புதிய உயரங்களைத் தொடும் என அரசியல் பார்வையாளர்கள் நம்புகின்றனர். 
 

இதையும் படிங்க: அமெரிக்கா - ஈரான் மீண்டும் மோதல்! அமைதி ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்!! போர் பதற்றம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share