×
 

"எல்லா சதிகளையும் முறியடிப்பேன்" இந்த ஆண்டே வங்கதேசம் திரும்புவேன்! ஷேக் ஹசீனா உறுதி!

எனக்கு எதிரான சதிகளை முறியடித்து இந்தாண்டே வங்கதேசத்திற்கு திரும்புவேன் என்று இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தஞ்சம் புகுந்து வசித்து வரும் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, தனக்கு எதிராக நடத்தப்பட்ட அரசியல் சதிகளை முறியடித்து, இந்த ஆண்டுக்குள் வங்கதேசத்திற்கு திரும்புவேன் என்று உறுதியாக தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து, வங்கதேச அரசியல் வட்டாரங்களில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு வங்கதேசத்தில் மாணவர் போராட்டம் தீவிரமடைந்து, அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து அவர் பாதுகாப்பு காரணங்களால் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். பின்னர் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்தது. அதனைத் தொடர்ந்து தற்போதைய தாரிக் ரஹ்மான் தலைமையிலான அரசும், ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைக்குமாறு இந்தியாவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதற்கிடையில், கடந்த ஆண்டு நவம்பரில் வங்கதேச குற்றவியல் தீர்ப்பாயம், வன்முறை தொடர்பான வழக்கில் ஷேக் ஹசீனாவை குற்றவாளி என அறிவித்து, அவருக்கு மரண தண்டனை விதித்தது. இருப்பினும், அந்த தீர்ப்பு அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் வழங்கப்பட்டதாக அவர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

இதையும் படிங்க: இந்தியாவுக்கு வர வேண்டிய திட்டத்தை தட்டிப்பறித்தது சீனா!! பாதுகாப்பு அச்சுறுத்தலால் கவலை!

இந்த நிலையில், ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் ஷேக் ஹசீனா, "எனக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு நீதிக்கு எதிரானது. இது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை. அவாமி லீக் கட்சிக்கு தலைமை இல்லாத நிலையை உருவாக்கும் முயற்சிதான் நடைபெறுகிறது. நீதித்துறை அரசியல் பழிவாங்கும் கருவியாக மாற்றப்பட்டுள்ளது" என்று கூறினார்.

மேலும், "எனக்கு மரண பயம் இல்லை. 1975-ஆம் ஆண்டு என் குடும்பத்தையே இழந்தேன். என்னை கொல்ல பலமுறை முயற்சிகள் நடந்தன. பல சதித் திட்டங்கள் தீட்டப்பட்டன. ஆனால் அனைத்தையும் முறியடித்து மக்களின் ஆதரவுடன் ஐந்து முறை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். என் நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்தேன். அதே நம்பிக்கையுடன் அனைத்து தடைகளையும் கடந்து இந்த ஆண்டே வங்கதேசத்திற்கு திரும்புவேன்" என்றும் அவர் தெரிவித்தார்.

ஷேக் ஹசீனாவின் இந்த பேச்சு, வங்கதேச அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீண்டும் நாடு திரும்புவாரா, அல்லது அரசியல் மற்றும் சட்ட சவால்கள் தொடருமா என்பது குறித்து அடுத்தகட்ட நிகழ்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

இதையும் படிங்க: ஐ.நா. பொதுச்சபை அடுத்த தலைவர்..!! வங்கதேச வெளியுறவு துறை மந்திரி கலீலூர் ரகுமான் தேர்வு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share