இந்திய விமானப்படை டூ தனியார் நிறுவனம்..!! நாட்டின் ஹீரோ அபிநந்தனின் புதிய பயணம்!!
எதிரியின் F-16ஐ வீழ்த்திய பின்னர் தனது விமானம் தாக்கப்பட்டு பாராசூட் மூலம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் இறங்கினார்.
தமிழ்நாட்டின் பெருமைமிகு மகன், இந்திய விமானப்படையின் முன்னாள் குரூப் கேப்டன் அபிநந்தன் வர்த்தமான் இன்று மீண்டும் செய்திகளில் இடம் பிடித்துள்ளார். 2019ஆம் ஆண்டு பாலகோட் தாக்குதலுக்குப் பிறகு நடந்த வான்வழி மோதலில் பாகிஸ்தானின் மேம்பட்ட F-16 போர் விமானத்தை தனது MiG-21 பைசன் மூலம் சுட்டு வீழ்த்தி, எதிரி நிலத்தில் பாராசூட் குதித்து கைதான பின்னரும் தைரியத்துடன் திரும்பி வந்த அந்த வீரர், இப்போது தனியார் விமான நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கியுள்ளார்.
1983 ஜூன் 21இல் சென்னையில் தமிழ் ஜெயின் குடும்பத்தில் பிறந்த அபிநந்தன், காஞ்சிபுரம் அருகே உள்ள திருப்பனமூர் கிராமத்தைச் சேர்ந்தவர். தந்தை ரிடயர்டு ஏர் மார்ஷல் சிம்மகுட்டி வர்த்தமான் (மிக்-21 பைலட்), தாய் மருத்துவர். சைனிக் பள்ளி அமராவதிநகரிலும், தேசிய பாதுகாப்பு அகாடமியிலும் பயின்ற அவர் 2004இல் விமானப்படையில் சேர்ந்தார். மனைவி டான்வி மார்வாஹாவும் முன்னாள் ஸ்குவாட்ரன் லீடர்.
சுமார் 22 ஆண்டுகள் சேவை ஆற்றிய அவர், மார்ச் 31, 2026 அன்று முன்கூட்டியே ஓய்வு பெற்றார். 2019 பிப்ரவரி 14 புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பாலகோட்டில் நடந்த இந்திய விமானப்படையின் தாக்குதலுக்கு எதிர்வினையாக பாகிஸ்தான் விமானங்கள் வந்தபோது, விங் கமாண்டராக இருந்த அபிநந்தன் களமிறங்கினார். எதிரியின் F-16ஐ வீழ்த்திய பின்னர் தனது விமானம் தாக்கப்பட்டு பாராசூட் மூலம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் இறங்கினார்.
இதையும் படிங்க: நேபாளத்திற்கு 10 டன் நிவாரணப் பொருட்கள்: இந்திய விமானப்படையின் C-130J விமானம் விரைந்தது!
மூன்று நாட்கள் சிறை வைக்கப்பட்ட அவர், “நான் இந்திய விமானப்படை வீரர், தென்னிந்தியாவைச் சேர்ந்தவன்” என்று மிடுக்காக பதிலளித்த வீடியோ நாடெங்கும் பரவியது. மார்ச் 1, 2019இல் விடுவிக்கப்பட்ட அவருக்கு 2021இல் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டு, குரூப் கேப்டனாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. தற்போது 43 வயதான அபிநந்தன், பாதுகாப்பு அமைச்சகத்தின் NOC பெற்று, DGCA தேர்வுகளை முடித்து கடந்த ஆகஸ்டில் கோவா தளம் கொண்ட FLY91 விமான நிறுவனத்தில் இணைந்துள்ளார்.
மார்ச் 2024இல் தொடங்கிய இந்த நிறுவனம் ஆறு ATR 72-600 விமானங்களுடன் கோவா-ஹைதராபாத் தளங்களில் இயங்குகிறது. அவர் தற்போது ATR வகை பயிற்சியில் உள்ளார். இராணுவப் பைலட்டுகள் உடனடியாக தனியார் துறைக்கு செல்ல முடியாது. முறையான அனுமதிகள், சான்றிதழ்கள் தேவை. ஆனால் அவர்களின் அனுபவமும் துணிச்சலும் வணிக விமானத் துறையில் மிகுந்த வரவேற்பைப் பெறுகின்றன. அபிநந்தனின் இந்த மாற்றம், போர் வீரனின் புதிய அத்தியாயமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 300 அடி கீழே இறங்கிய ஏர் இந்தியா விமானம்! கஞ்சா போதையில் பைலட்? அதிர்ச்சி தகவல்!