விலை உயரும் கேன்சர் மருந்துகள்!! நஷ்டத்தால் உற்பத்தி நிறுத்தம்? விலை உயர்வுக்கு ஒப்புதல்!
புற்றுநோயாளிகளின் உயிரை காக்கும், 'கீமோதெரபி' மருந்துகளின் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்தி வந்த நிலையில், நஷ்டம் காரணமாக மருந்து நிறுவனங்கள் அதன் உற்பத்தியை நிறுத்தின.
புற்றுநோயாளிகளின் சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கும் கீமோதெரபி மருந்துகளின் விலையை உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. மருந்து பற்றாக்குறை ஏற்படாமல் தடுப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
புற்றுநோய்க்கான சிகிச்சையில் பரவலாக பயன்படுத்தப்படும் ‘கார்போபிளாட்டின்’ மற்றும் ‘சிஸ்பிளாட்டின்’ உள்ளிட்ட மருந்துகள் தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதனால், இந்த மருந்துகளின் விற்பனை விலையை தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு விதிகளின் கீழ் மத்திய அரசு நிர்ணயித்து வந்தது. நோயாளிகள் குறைந்த விலையில் சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளில், இந்த மருந்துகளை தயாரிக்க தேவையான மூலப்பொருட்களின் விலை சர்வதேச சந்தையில் கணிசமாக உயர்ந்துள்ளது. அதேசமயம், உற்பத்திச் செலவுகள் அதிகரித்ததுடன், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக தற்போதைய விலையில் மருந்துகளை விற்பனை செய்வது பொருளாதார ரீதியாக சாத்தியமில்லை என்று பல மருந்து நிறுவனங்கள் தெரிவித்தன.
இதையும் படிங்க: "தமிழகத்தையே உலுக்கிய கவின் ஆணவக் கொலை"..! சுர்ஜித்தின் தந்தை சரவணனுக்கு ஜாமீன்..!!
இதன் விளைவாக சில முக்கிய நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்ததோடு, சிலர் தற்காலிகமாக உற்பத்தியை நிறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், சில மருந்து உற்பத்தி ஆலைகளில் ஏற்பட்ட தரக்கட்டுப்பாட்டு சிக்கல்களும் உற்பத்தி பாதிப்புக்கு காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் எதிர்காலத்தில் புற்றுநோய் சிகிச்சைக்கு தேவையான மருந்துகளில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவானது.
இந்த சூழ்நிலையில், மருந்து உற்பத்தி செலவுகள் மற்றும் சந்தை நிலவரம் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில், ‘கார்போபிளாட்டின்’, ‘சிஸ்பிளாட்டின்’ மற்றும் சில முக்கிய நோய் எதிர்ப்பு மருந்துகளின் விலையை திருத்தி நிர்ணயிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த முடிவின் மூலம் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ந்து உற்பத்தியை மேற்கொள்ள முடியும் என்றும், புற்றுநோயாளிகளுக்கு தேவையான மருந்துகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நோயாளிகளின் சிகிச்சை பாதிக்கப்படாமல் இருப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
இதையும் படிங்க: +2 விடைத்தாள் நகல் அனுப்பும் பணிகள் தாமதம்?! மறுமதிப்பீட்டிற்கு கால அவகாசம் நீட்டிக்கப்படுமா? மாணவர்கள் எதிர்ப்பார்ப்பு!