குடியரசு தினத்துக்கு ஐரோப்பிய சிறப்பு விருந்தினர்கள்.. உர்சுலா மற்றும் அன்டோனியோ கோஸ்டா வருகை!
இந்தியாவின் 77-ஆவது குடியரசு தின விழாவில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் அன்டோனியோ கோஸ்டா மற்றும் உர்சுலா வான் டெர் லேயன் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர்.
இந்தியாவின் 77-ஆவது குடியரசு தின விழாவில் பங்கேற்க ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோருக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
உலக நாடுகளுடனான உறவை வலுப்படுத்தும் நோக்கில், ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தின விழாவிற்கு வெளிநாட்டுத் தலைவர்களைச் சிறப்பு விருந்தினர்களாக இந்தியா அழைப்பது வழக்கம். அந்த வகையில், வரும் ஜனவரி 26, 2026 அன்று டெல்லி கடமைப் பாதையில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட அணிவகுப்பில், ஐரோப்பிய ஒன்றியத்தின் மிக முக்கிய இரு தலைவர்களும் தலைமை விருந்தினர்களாகக் கலந்துகொள்ள உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று இவர்கள் இருவரும் ஜனவரி 25 முதல் 27 வரை மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகின்றனர்.
ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் இந்த வருகை வெறும் சடங்கு ரீதியானது மட்டுமல்ல, இது புவிசார் அரசியல் ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே நீண்டகாலமாகப் பேச்சுவார்த்தையில் இருக்கும் ‘சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்’ (FTA) இவர்களின் வருகையின் போது இறுதி செய்யப்பட்டு கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வர்த்தகம், தொழில்நுட்பம், பசுமை எரிசக்தி மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இருதரப்பு உறவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வதே இவர்களின் இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.
இதையும் படிங்க: 2026 குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி..!! கிரீன் சிக்னல் காட்டிய மத்திய அரசு..!!
ஜனவரி 26 அன்று நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடியுடன் இணைந்து இவர்கள் இருவரும் மேடையைப் பகிர்ந்து கொள்வார்கள். அதேசமயம், இந்தியாவின் 77-ஆவது குடியரசு தின விழாவானது ‘வந்தே மாதரம்’ கருப்பொருளை மையமாகக் கொண்டு நடத்தப்பட உள்ளது. இது ‘வந்தே மாதரம்’ பாடல் வரிகள் முதன்முதலில் வெளியானதன் 150-ஆவது ஆண்டைக் குறிக்கும் வகையில் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது. உலகத் தலைவர்களின் வருகையையொட்டி டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு, சர்வதேச அளவில் இந்தியாவின் ராஜதந்திர உறவு புதிய உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கையெழுத்து போடு; நிதியைத் தருகிறோம்! மத்திய அரசு பிளாக்மெயில் செய்வதாக அமைச்சர் அன்பில் மகேஷ் ஆவேசம்!