18 ஆண்டு பேச்சுவார்த்தை!! இறுதியானது அனைத்து ஒப்பந்தங்களின் 'தாய்' ஒப்பந்தம்! இந்தியாவின் மாஸ் மொமண்ட்!
இந்தியா- ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் 2027ல் இருந்து அமலுக்கு வரும். இந்த ஒப்பந்தம் அனைத்து ஒப்பந்தங்களுக்கு தாய் என ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் வர்ணித்து இருக்கிறார்.
இந்தியாவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) இறுதியாக முடிவடைந்துள்ளது. இந்த ஒப்பந்தம் 2027-ம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தியா வந்திருந்த ஐரோப்பிய யூனியன் கமிஷன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இதை "அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாய்" என்று வர்ணித்துள்ளார்.
2007-ல் தொடங்கிய பேச்சுவார்த்தைகள் 2013 வரை பல சுற்றுகளாக நடந்தன. ஆனால் கார், மதுபானங்கள் மீதான இறக்குமதி வரி, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான தரவு பாதுகாப்பு, அறிவுசார் சொத்துரிமை, தொழிலாளர் விதிகள் போன்ற விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் பேச்சு நின்றுபோனது. 2022 ஜூன் மாதம் மீண்டும் அதிகாரப்பூர்வ பேச்சு தொடங்கியது. தற்போது அது வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.
குடியரசு தின விழாவில் பங்கேற்க டெல்லிக்கு வந்த ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா ஆகியோர் ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் முடிவடைந்தது.
இதையும் படிங்க: இறுதிக்கட்டத்தை எட்டிய ஒப்பந்தம்!! இந்தியாவுக்கு குட் நியூஸ்! ஐரோப்பிய யூனியன் தலைவர் தகவல்!
இந்த ஒப்பந்தத்தின் மூலம் பெரும்பாலான பொருட்களுக்கு இரு தரப்பும் பரஸ்பரம் இறக்குமதி வரியை நீக்குகின்றன. இதனால் ஐரோப்பிய பொருட்கள் இந்தியாவில் மலிவாக கிடைக்கும், இந்திய ஏற்றுமதிகள் ஐரோப்பாவில் விரிவடையும். இரு தரப்புக்கும் பெரிய பொருளாதார பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி இதை "இந்தியாவின் வரலாற்றில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம்" என்று பெருமிதம் தெரிவித்தார். சமூக வலைதளத்தில் உர்சுலா வான் டெர் லேயன் "ஐரோப்பாவும் இந்தியாவும் இன்று வரலாறு படைக்கின்றன. அனைத்து ஒப்பந்தங்களின் தாய் ஒப்பந்தத்தை நாங்கள் நிறைவு செய்துள்ளோம். இரு தரப்பினரும் பயனடைவார்கள். இது ஒரு ஆரம்பம் மட்டுமே. உறவை இன்னும் வலுவாக வளர்ப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.
ஐரோப்பிய யூனியன் 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட அமைப்பு. ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோஷியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லாட்வியா, லிதுவேனியா, லக்சம்பர்க், மால்டா, நெதர்லாந்து, போலந்து, போர்ச்சுகல், ருமேனியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன் ஆகிய நாடுகள் இதில் அங்கம் வகிக்கின்றன.
இந்த ஒப்பந்தம் உலக வர்த்தகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவுடனான வர்த்தக பதற்றங்கள் நிலவும் நிலையில் இது இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் புதிய வாய்ப்புகளை திறக்கும்.
இதையும் படிங்க: இறுதிக்கட்டத்தை எட்டிய ஒப்பந்தம்!! இந்தியாவுக்கு குட் நியூஸ்! ஐரோப்பிய யூனியன் தலைவர் தகவல்!