பயப்பட வேணாம்!! 78 நாளுக்கு கச்சா எண்ணெய் இருப்பு இருக்கு! பார்லி., நிலைக்குழு கூட்டத்தில் தகவல்!
'நம் நாட்டில் கச்சா எண்ணெய் இருப்பு அடுத்த 78 நாட்களுக்கு இருப்பதால், பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இல்லை' என, பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி: மேற்காசியப் போர் பதற்றம் காரணமாக எண்ணெய் வரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவுக்கு அடுத்த 78 நாட்களுக்கு போதுமான கச்சா எண்ணெய் கையிருப்பு இருப்பதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் உடனடி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாசாரத் துறைகள் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
சில பகுதிகளில் பெட்ரோலிய பொருட்கள் ரேஷன் முறையில் வழங்கப்படுவதாகவும், பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்ப நீண்ட வரிசைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். மேற்காசியப் போர் நீண்ட காலம் நீடிக்கும் என தெரிந்தும் மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏன் எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினர்.
இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஒருபகுதி மட்டுமே?! முக்கிய சவால் மீதம் இருப்பதாக நிர்மலா சீதாராமன் பகீர்!
இதற்கு பதிலளித்த பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள், “தற்போதைய சூழலில் நாட்டில் 78 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது. எனவே பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை” என்று தெளிவுபடுத்தினர்.
மேலும், ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் காரணமாக மேற்காசியாவில் நிறுத்தப்பட்டிருந்த 37 இந்தியக் கப்பல்களில் பெரும்பாலானவை ஏற்கெனவே இந்தியாவுக்கு வந்து சேர்ந்துவிட்டதாகவும், 13 கப்பல்கள் மட்டுமே தற்போது அப்பகுதியில் சிக்கியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
போர் எப்போது முடியும் என்பது நிச்சயமற்ற நிலையிலும், எந்தவித தட்டுப்பாடும் ஏற்படாமல் தடுக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக அதிகாரிகள் கூறினர். கப்பல் போக்குவரத்து மாற்று வழிகளை ஆராய்வது, இருப்பை திறம்பட நிர்வகிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
வரவிருக்கும் காரிப் பருவத்தை சமாளிக்கும் வகையில் உரங்களின் கையிருப்பும் போதுமான அளவில் உள்ளதாக மத்திய உர அமைச்சக அதிகாரிகள் குழு உறுப்பினர்களுக்கு விளக்கினர். போர் காரணமாக உர விலை உயர்வு ஏற்படும் அபாயம் இருந்தாலும், தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் உறுதி அளித்தனர்.
இந்தியா போன்ற பெரிய எண்ணெய் இறக்குமதி நாடுகளுக்கு ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் பெரும் சவாலாக உள்ள நிலையில், அரசின் தற்போதைய கையிருப்பு மற்றும் முயற்சிகள் நாட்டு மக்களுக்கு நிம்மதியை அளிக்கும் வகையில் உள்ளன. இருப்பினும், சர்வதேச சூழல் மேலும் மோசமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: ஹார்முஸ் நீரிணை திறப்பது கட்டாயம்! இல்லையென்றால் இன்னொரு வழியில் திறக்கப்படும்! மார்கோ வார்னிங்!