×
 

பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஒருபகுதி மட்டுமே?! முக்கிய சவால் மீதம் இருப்பதாக நிர்மலா சீதாராமன் பகீர்!

எரிபொருள், உரங்கள், அன்னிய செலாவணி ஆகியவற்றில் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன் வலியுறுத்தி உள்ளார்.

மும்பை: உலக அரங்கில் ஏற்பட்டுள்ள புதிய பதற்றம் இந்தியப் பொருளாதாரத்துக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. மேற்காசியாவில் ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தொடுத்த தாக்குதலுக்குப் பிறகு ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டதால் சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவில் கடந்த 11 நாட்களில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா ₹7 உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கியின் (SIDBI) 37வது ஆண்டு விழாவில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். “கச்சா எண்ணெய் விலை உயர்வு என்பது தற்போதைய சவாலின் ஒரு பகுதி மட்டுமே. எரிபொருளைத் தவிர, உரங்களின் விலை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது” என்று அவர் வலியுறுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் விடுத்துள்ள மூன்று முக்கிய கோரிக்கைகளை அமைச்சர் சுட்டிக்காட்டினார். எரிபொருள் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது, வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்ப்பது மற்றும் ஒரு ஆண்டுக்கு தங்கம் வாங்காமல் இருப்பது ஆகியவை அன்னிய செலாவணியைப் பாதுகாக்க உதவும் என்றார். “இந்தக் கோரிக்கையை நாம் அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.

இதையும் படிங்க: அழுத்தத்திற்கு அஞ்சி பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்!! அமெரிக்காவுக்கு ஈரான் திட்டவட்டம்!!

ஈரான்-அமெரிக்க மோதல் வெறும் புவிசார் அரசியல் பிரச்னை அல்ல என்றும், இதனால் எரிபொருள் செலவு உயர்வு, சரக்கு போக்குவரத்தில் தாமதம், கப்பல் கட்டணம் அதிகரிப்பு, உற்பத்திப் பொருட்களுக்கு தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் ஏற்படும் என்றும் நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டினார். அதேசமயம், நாட்டின் உள்நாட்டுப் பொருளாதாரம் இன்னும் வலுவாக இருப்பதாகவும், ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு, உள்நாட்டுத் தேவை உயர்வு, தனியார் முதலீடு அதிகரிப்பு போன்றவை நல்ல அறிகுறிகள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு (MSME) சேர வேண்டிய ₹8.1 லட்சம் கோடி நிலுவைத் தொகையை பொதுத் துறை நிறுவனங்கள் 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்ற உத்தரவையும் அவர் வலியுறுத்தினார். அரசியல் காரணங்களுக்காக நாட்டின் சாதனைகளை மறைத்து அவநம்பிக்கையைப் பரப்ப முயற்சிப்போரை அனுமதிக்கக் கூடாது என்று தெரிவித்தார்.

தங்கம் விலை வேகமாக உயர்வதும் நாட்டுக்கு சவாலை ஏற்படுத்துவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். தற்போதைய நெருக்கடியை ஒற்றுமையுடன் எதிர்கொண்டு, பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று அவர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிங்க: பயிர்க்கடன் தள்ளுபடியில் பித்தலாட்டம்..! விஜய் அரசு மீது TTV தினகரன் குற்றச்சாட்டு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share