"இந்தியா ஏற்கனவே இந்து ராஷ்டிரம் தான்" - நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் அதிரடி!
இந்தியா ஏற்கனவே ஒரு இந்து தேசமாகவே உள்ளது, அதைத் தனியாக அறிவிக்கத் தேவையில்லை என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ள கருத்து பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா ஏற்கனவே ஒரு இந்து ராஷ்டிரமாகவே இருந்து வருகிறது; எனவே அதனை முறைப்படி அறிவிக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை" என ஆர்.எஸ்.எஸ் (RSS) தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் மத அடையாளங்கள் குறித்த விவாதங்கள் மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில், அவரது இந்தப் பேச்சு அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய மோகன் பகவத், இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் என்பது இந்துத்துவ விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டது என்று குறிப்பிட்டார். "இந்து என்பது ஒரு மதம் மட்டுமல்ல, அது ஒரு வாழ்வியல் முறை. அந்த அடிப்படையில் இந்தியா ஒரு இந்து தேசமாகவே இயங்கி வருகிறது. இதனைப் புதிதாகப் பிரகடனம் செய்யத் தேவையில்லை" என்று அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.
மோகன் பகவத்தின் இந்தக் கருத்து, அண்மையில் உச்ச நீதிமன்ற நீதிபதி கோட்டிஸ்வர் சிங் வெளியிட்ட கருத்திற்கு நேர்மாறாக அமைந்துள்ளது. நீதிபதி கோட்டிஸ்வர் சிங் தனது உரையில், "இந்தியாவை ஒரே ஒரு மத அடையாளத்திற்குள் மட்டும் அடக்கிவிட முடியாது. இந்தியா தன்னை ஒருபோதும் ஒரு இந்து நாடாக (Hindu State) அறிவித்துக் கொண்டதில்லை. நமது அரசியலமைப்புச் சட்டம் பன்முகத்தன்மையை வலியுறுத்துகிறது" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: "உங்கள் கனவுக்கு நீங்கள் நேர்மையாக இருங்கள்" - இளைஞர்களுக்கு விராட் கோலி வழங்கிய அறிவுரை வைரல்!
ஒரே வார இடைவெளியில், ஒருபுறம் நாட்டின் மிக உயரிய நீதிமன்ற நீதிபதியின் சட்ட ரீதியான பார்வையும், மறுபுறம் நாட்டின் மிகப்பெரிய கலாச்சார அமைப்பின் தலைவரது சித்தாந்த ரீதியான பார்வையும் நேருக்கு நேர் முரண்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. இந்தியாவின் 'மதச்சார்பின்மை' மற்றும் 'இந்து ராஷ்டிரம்' குறித்த இந்த உரையாடல்கள், 2026-ஆம் ஆண்டின் மிக முக்கியமான அரசியல் விவாதமாக உருவெடுத்துள்ளது.
இதையும் படிங்க: பெருமைக்குரிய மைல்கல்..!! இந்தியாவின் ராணுவ பலம்: உலக அளவில் 5-வது இடம்..!!