×
 

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ராணுவப் போக்குவரத்து விமானம்! ஏர்பஸ் C -295! முதற்கட்ட சோதனை வெற்றி!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் சி-295 ராணுவப் போக்குவரத்து விமானத்தின் முதற்கட்ட சோதனை வெற்றி அடைந்தது என இந்திய விமானப்படை தெரிவித்து உள்ளது

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் சி-295 ராணுவப் போக்குவரத்து விமானத்தின் முதற்கட்ட சோதனை வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. இந்த சாதனை, நாட்டின் பாதுகாப்பு உற்பத்தித் துறையிலும், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திலும் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

இந்திய விமானப்படையின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், ஏர்பஸ் டிபென்ஸ் மற்றும் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனங்கள் இணைந்து சி-295 போக்குவரத்து விமானங்களை இந்தியாவில் உற்பத்தி செய்து வருகின்றன. இதன் மூலம் வெளிநாடுகளின் மீதான சார்பை குறைத்து, உள்நாட்டிலேயே நவீன ராணுவ விமானங்களை உருவாக்கும் திறனை இந்தியா பெற்றுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் சி-295 விமானம் தனது முதற்கட்ட சோதனைப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்த வெற்றிகரமான சோதனை, இந்தியாவின் விமான உற்பத்தித் திறன் உலக அளவில் புதிய கவனத்தைப் பெற்றுள்ளது. பாதுகாப்புத் துறைக்குத் தேவையான முக்கிய உபகரணங்களை இந்தியாவே தயாரிக்கும் இலக்கை நோக்கி நாடு வேகமாக முன்னேறி வருவதாகவும் இது காட்டுகிறது.

இதையும் படிங்க: ரேடாரில் சிக்காத ஸ்டெல்த் போர் விமானம்! களமிறங்கியது இந்தியா! 3 தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர்!!

சி-295 விமானம் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 9,000 கிலோ வரை சரக்குகளை சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த விமானம், அவசர காலங்களில் மருத்துவ சேவைகளுக்கும் பயன்படுத்தப்படலாம். இதில் 24 ஸ்ட்ரெச்சர்கள் வரை அமைக்கும் வசதி உள்ளதால், காயமடைந்த வீரர்களை பாதுகாப்பாக மாற்றுவதற்கும் இது உதவும். மேலும், பேரிடர் கால நிவாரணப் பணிகள், வீரர்கள் மற்றும் ராணுவ உபகரணங்களை விரைவாக கொண்டு செல்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளிலும் இந்த விமானம் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதற்கட்ட சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்த குழுவினருக்கு இந்திய விமானப்படை பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்தியாவின் வளர்ந்து வரும் விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப திறன்களுக்கு இந்த சாதனை புதிய வலிமையை வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏர்பஸ் டிபென்ஸ் நிறுவனமும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. இந்திய விமானப்படை, பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் மத்திய அரசின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ள நிறுவனம், இந்திய விமானத் துறையின் எதிர்காலத்தை உருவாக்கும் பணியில் பங்கெடுப்பது பெருமை அளிப்பதாக கூறியுள்ளது. இந்த வெற்றி, இந்திய பாதுகாப்புத் துறையின் தன்னிறைவு பயணத்தில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ரேடாரில் சிக்காத ஸ்டெல்த் போர் விமானம்! களமிறங்கியது இந்தியா! 3 தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share