×
 
☰

ரஷ்யா-உக்ரைன் போர்: களத்தில் இறங்கிய இந்தியா! புடின், ஜெலன்ஸ்கியுடன் அடுத்தடுத்து பேச்சு!

இந்தியாவிடம் நல்ல யோசனைகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். உக்ரைன் வெளியுறவு அமைச்சரும், இந்தியா முன்வைத்த திட்டம் பரந்த மற்றும் விரிவானதாக இருப்பதாக கூறியுள்ளார்.

ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் நான்கு ஆண்டுகளைக் கடந்து நீடித்து வரும் நிலையில், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தனது முயற்சிகளை இந்தியா அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது.

இதுவரை இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி வந்த இந்தியா, தற்போது ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு தரப்புடனும் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஜெய்சங்கர், இந்தியாவின் அணுகுமுறை வெறும் கருத்து தெரிவிப்பதுடன் நின்றுவிடவில்லை என்றும், சமீப மாதங்களில் அமைதிக்கான முயற்சிகளில் இந்தியா சற்று அதிகமாக ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.

இதையும் படிங்க: இருவரும் போரை முடிக்க விரும்புகிறார்கள்! புடின் - ஜெலன்ஸ்கி குறித்து டிரம்ப் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

குறிப்பாக, கருங்கடல் பகுதியில் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்வது குறித்து ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் இந்தியா பேசி வருகிறது. அதுமட்டுமின்றி, கருங்கடல் வழியாக தானியங்கள் மற்றும் எரிசக்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதில் ஏற்பட்டுள்ள தடைகளை குறைப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

மேலும், கப்பல்கள் மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர்ப்பதற்கான சாத்தியக்கூறுகளும் விவாதத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்த முயற்சிகளுக்கு பின்னணியில் முக்கியமான காரணமும் உள்ளது. கடந்த ஜூலை மாதம் கருங்கடல் பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்றதில் இந்திய மாலுமிகள் சிலர் உயிரிழந்தும், காயமடைந்தும் உள்ளனர்.

இதையடுத்து ரஷ்யா மற்றும் உக்ரைன் வெளியுறவு அமைச்சர்களிடம் இந்தியா தனது கடும் எதிர்ப்பை தெரிவித்ததாக ஜெய்சங்கர் கூறியுள்ளார். அந்த பேச்சுவார்த்தைகள் பின்னர் தானியங்கள், உரங்கள் மற்றும் எரிபொருள் ஏற்றுமதி தொடர்பான பரந்த விவாதமாக மாறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இந்தியாவின் அமைதி முயற்சிகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பாராட்டு தெரிவித்திருந்தார். இந்தியாவிடம் நல்ல யோசனைகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். உக்ரைன் வெளியுறவு அமைச்சரும், இந்தியா முன்வைத்த திட்டம் பரந்த மற்றும் விரிவானதாக இருப்பதாக கூறியுள்ளார்.

எனினும், இந்த முயற்சியால் உடனடியாக போர் முடிவுக்கு வரும் என்று உறுதியாகக் கூற முடியாது. இரு தரப்புக்கும் இடையேயான அடிப்படை பிரச்சினைகள் தொடர்ந்து நீடிப்பதால், இந்தியாவின் முயற்சி முதற்கட்டமாக வரையறுக்கப்பட்ட ஒப்பந்தங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.

இதையும் படிங்க: உக்ரைன் போருக்கு நடுவே ரஷ்ய தேர்தல்! புடின் கட்சிக்கு மீண்டும் மக்கள் ஆதரவு? 57.5% வாக்குகளுடன் முன்னிலை!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share