×
 

பாகிஸ்தானுக்கு அடுத்த அடி.. மருந்து வர்த்தகம் குளோஸ்.. ஏற்றுமதியை நிறுத்தியது தமிழகம்..!

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் மிகுந்துள்ள நிலையில் தமிழக மருந்து உற்பத்தியாளர்கள் பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நடவடிக்கையை நிறுத்தியுள்ளனர்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் மிகுந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு மருந்துகள் மற்றும் மருந்து தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் ஏற்றுமதியை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனையடுத்து, தமிழக மருந்து உற்பத்தியாளர்கள் பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நடவடிக்கையை நிறுத்தியுள்ளனர். குறிப்பாக இந்திய எல்லை மாநிலங்களின் முக்கிய பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்துகிறது. பாகிஸ்தான் வீசும் ட்ரோன், ஏவுகணைகளை வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் அழித்து நமது ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. 

இதனால் எல்லையில் நாளுக்கு நாள் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, பஹல்காம் தாக்குதலில் இருந்தே பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தான் உடனான வர்த்தகத்தை நிறுத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.

இதையும் படிங்க: அதிர்ச்சி பின்னணி.. ராணுவ அதிகாரியின் தந்தை தீவிரவாதியா? பயங்கரவாதிகளுடன் ஒட்டி உறவாடும் பாக்.,?

அதன்படி தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் மருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மருந்து உற்பத்தியாளா்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் இந்தியாவின் மருந்து சந்தை மிகப் பெரியது. உலக அளவில் ஒட்டுமொத்த மருந்து உற்பத்தியில் பாதிக்கும் மேல் இந்தியாவில் உற்பத்தியாகிறது. அவை உள்நாட்டு பயன்பாட்டுக்கு மட்டுமின்றி அமெரிக்கா, பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அதிலும் குறிப்பாக ஜெனரிக் மருந்துகள், அதற்கான மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வதில் இந்தியா முன்னிலையில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 2.40 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். அதில் தமிழகத்தில் இருந்து மட்டும் ஆண்டுதோறும் 8,000 முதல் 10,000 கோடி ரூபாய் வரையிலான மருந்துகளை ஏற்றுமதி செய்கிறோம்.

அந்த வகையில் பாகிஸ்தானுக்கு உயிர் காக்கும் மருந்துகள் உட்படப் பல மருந்துகள் செல்கிறது. மருந்துகள் மட்டுமின்றி மருந்துகளுக்கான மூலப்பொருட்களையும் இங்கிருந்து அனுப்பி வருகிறோம். இதன் மொத்த வா்த்தக மதிப்பு 100 கோடி ரூபாய். இப்போது நிலவும் சூழலில், மத்திய அரசின் அறிவுறுத்தல்படி பாகிஸ்தானுக்கு அனுப்பப்படும் மருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. 

இதனால் ரூ.100 கோடி வரை இழப்பு ஏற்படலாம். இருப்பினும், மறு அறிவிப்பு வரும் வரை ஏற்றுமதி செய்யப்போவதில்லை. அதேநேரம் மற்ற நாடுகளுக்கான மருந்து ஏற்றுமதி தொடரும். அதில் எந்தவொரு பாதிப்பும் இல்லை. இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்கா உட்படப் பல நாடுகள் கூடுதல் மருந்துகளுக்கு முன்கூட்டியே ஆர்டர் கொடுத்துள்ளன. 

நாம் சில மூலப்பொருட்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் நிலையில், அதில் எந்தவொரு சிக்கலும் இல்லை. போர் சூழல் அதிகரித்தாலும் மருந்து தட்டுப்பாடு வர எந்தவொரு வாய்ப்பும் இல்லை என்றும் மருந்து உற்பத்தியாளா்கள் சங்கம் கூறியுள்ளது. பாகிஸ்தானுக்கு அனுப்பப்படும் மருந்துகளை தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களும் நிறுத்திவிட்டன. இதனால் பாகிஸ்தானில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: போருக்கு தயாராகிறதா பாக்.? எல்லையில் வீரர்கள் குவிப்பு.. இந்தியாவின் பதில் என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share