மோடி–சுவிஸ் அதிபர் சந்திப்பு! இந்தியர்களுக்கு வரப்போகும் முக்கிய வாய்ப்புகள்! முக்கிய திட்டங்கள்!
பயோடெக்னாலஜி, உயிரியல் அறிவியல், வங்கி, காப்பீடு மற்றும் உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் சுவிஸ் முதலீட்டை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் பேசப்பட்டன.
இந்தியா வந்துள்ள சுவிட்சர்லாந்து அதிபர் கய் பார்மலினுடன் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை டெல்லியில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். வர்த்தகம், முதலீடு, அறிவியல், தொழில்நுட்பம், ஆராய்ச்சி, கல்வி மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான மக்கள் தொடர்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
சுவிஸ் அதிபர் பார்மலின் அக்டோபர் 5 முதல் 7-ம் தேதி வரை இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இந்தியா-ஐரோப்பிய தடையற்ற வர்த்தகக் கூட்டமைப்பு (EFTA) இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் அமலுக்கு வந்து ஓராண்டு நிறைவடையும் நிலையில் அவரது பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சந்திப்புக்குப் பிறகு பேசிய பிரதமர் மோடி, இந்தியா-சுவிட்சர்லாந்து இடையிலான முதலீட்டு வாய்ப்புகளை மேலும் எளிதாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சுவிஸ் சந்தையில் இந்தியப் பொருட்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை உருவாக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. விவசாயம், மருந்துகள், ஜவுளி மற்றும் பொறியியல் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து இரு தரப்பும் கவனம் செலுத்துகின்றன.
இதையும் படிங்க: அக்.,11ல் சென்னை வரும் பிரதமர் மோடி! இளையராஜாவுக்கு கிடைக்கும் முக்கிய கவுரவம்! முழு விவரம்!!
அதேபோல் பயோடெக்னாலஜி, உயிரியல் அறிவியல், வங்கி, காப்பீடு மற்றும் உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் சுவிஸ் முதலீட்டை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் பேசப்பட்டன. இந்தியா-சுவிட்சர்லாந்து பொருளாதார உறவை மேலும் விரிவுபடுத்துவதற்கு தற்போதைய கூட்டாண்மை முக்கிய தளமாக பார்க்கப்படுகிறது.
சுகாதாரம், தூய எரிசக்தி மற்றும் விண்வெளி உள்ளிட்ட துறைகளில் கூட்டு ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. யோகா மற்றும் ஆயுர்வேதம் தொடர்பான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் இரு நாடுகளும் கவனம் செலுத்துகின்றன.
கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகளிலும் இந்தியர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குறிப்பாக மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், நிபுணர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சுவிட்சர்லாந்துடன் அதிகரிக்கும் ஒத்துழைப்பு பயனளிக்கும் என அவர் கூறினார். அறிவியல் மற்றும் கல்வியில் இரு நாடுகளுக்கும் ஏற்கனவே நீண்டகால தொடர்பு உள்ளது.
உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களிலும் இந்தியா-சுவிட்சர்லாந்து இணைந்து செயல்படுவது குறித்து தலைவர்கள் ஆலோசித்தனர். இதன் மூலம் இரு நாடுகளின் பொருளாதாரம், கல்வி மற்றும் ஆராய்ச்சி உறவுகள் அடுத்த கட்டத்துக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இன்னொரு 9/11 நடக்காமல் தடுத்த இந்தியர்! சுமித் ஒரு ஹீரோ! இந்திய விமானியை பாராட்டிய மோடி!