×
 

சீனாவை முந்தும் இந்தியா?! விண்வெளி வணிகத்தில் இன்னும் 2 ஆண்டுகளில் நடக்கப்போகும் மிகப்பெரிய மாற்றம்!

''உலக விண்வெளி வணிகத்தில், முன்னணியில் இருக்கும் சீனாவை, இந்தியா விரைவில் முந்தும்,'' என, சந்திரயான் 1 திட்டம் மற்றும் இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

சென்னை: உலக விண்வெளி வணிகத்தில் இந்தியாவின் பங்கு வரும் ஆண்டுகளில் வேகமாக அதிகரித்து, முன்னணியில் உள்ள சீனாவை இந்தியா முந்தும் நிலை உருவாகும் என சந்திரயான்-1 திட்டத்தின் முன்னாள் இயக்குனரும், இஸ்ரோவின் முன்னாள் இயக்குனருமான மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளின் விண்வெளி தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனது செயல்பாடுகளை மாற்றி அமைத்து வருவதாக அவர் கூறினார். குறிப்பாக, விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிப்பது எதிர்காலத்தில் இந்தியாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும் என அவர் குறிப்பிட்டார்.

சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான எஸ்.எஸ்.எல்.வி. தொழில்நுட்பத்தை தனியார் நிறுவனங்களுக்கும் வழங்கியிருப்பது இந்த மாற்றத்தின் முக்கிய தொடக்கமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ், அக்னிகூல் காஸ்மோஸ் உள்ளிட்ட இந்திய தனியார் விண்வெளி நிறுவனங்கள் செயற்கைக்கோள் ஏவுதலில் அதிகளவில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: விண்வெளி கனவுக்கு சவால்? தனியார் நிறுவனங்களுக்கு சென்ற இஸ்ரோ விஞ்ஞானிகள்! மத்திய அரசின் அவசர நடவடிக்கை!

தற்போது உலகளாவிய விண்வெளி வணிகத்தில் இந்தியாவின் பங்கு சுமார் 2 சதவீதமாக இருப்பதாக மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். தனியார் துறையின் பங்களிப்பு அதிகரிக்கும் நிலையில், இந்தப் பங்கு 10 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

உலக விண்வெளி வணிகத்தில் சீனா முன்னணியில் இருப்பதாக குறிப்பிட்ட அவர், செயற்கைக்கோள் ஏவுதலுக்கான சர்வதேச தேவையில் இந்தியா மிகப்பெரிய வாய்ப்பை பெற முடியும் என தெரிவித்தார். குறிப்பாக, உலக நாடுகள் அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனங்களை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலைக்கு மாற்றாக, இந்தியா நம்பகமான ஒரு தேர்வாக உருவெடுக்க முடியும் என்றும் கூறினார்.

குலசேகரன்பட்டினம் விண்வெளி ஏவுதளம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால், சுமார் இரண்டு வாரங்களுக்கு ஒரு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் திறனை இந்தியா பெறும் என அவர் தெரிவித்தார். விண்வெளியில் ஏற்கனவே செயல்பட்டு வரும் சிறிய செயற்கைக்கோள் கூட்டங்களின் ஆயுட்காலம் முடிவடையும் நிலையில், அவற்றுக்கு மாற்றாக புதிய செயற்கைக்கோள்களை தொடர்ந்து விண்ணில் செலுத்த வேண்டிய தேவை அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வாய்ப்பை இந்தியா சரியாக பயன்படுத்தினால், இன்னும் ஓரிரு ஆண்டுகளில் உலக விண்வெளி வணிகத்தில் முக்கிய இடத்தை பிடிக்க முடியும் என்றும், அப்போது அமெரிக்காவுக்கு மாற்று வழியைத் தேடும் நாடுகளுக்கு இந்தியா வலுவான மற்றும் நம்பகமான தேர்வாக மாறும் என்றும் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் உலக விண்வெளி வணிகத்தில் சீனாவை இந்தியா முந்தும் வாய்ப்பு இருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இந்திய விண்வெளித் துறையில் புதிய சகாப்தம்! இளைஞர்களின் கனவை விண்ணுக்கு எடுத்துச் செல்லும் விக்ரம்-1!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share