பிரமோஸ் ஏவுகணைக்கு பயங்கர மவுசு!! இந்தியாவிடம் டீல் பேசும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்!
கடந்தாண்டு இந்தியா-பாகிஸ்தான் மோதலின்போது பிரமோஸ் மற்றும் ஆகாஷ்தீர் அமைப்புகள் காட்டிய அபார செயல்திறன் உலக நாடுகளை கவர்ந்தது.
மேற்காசியா போருக்கு பின், தன் நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியாவிடம் இருந்து பிரமோஸ் ஏவுகணை, ஆகாஷ்தீர் வான்கவசம் ஆகியவற்றை வாங்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்காசிய போர் பதற்றத்துக்குப் பிறகு தன் நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) இந்தியாவிடம் இருந்து பிரமோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை மற்றும் ஆகாஷ்தீர் வான்பாதுகாப்பு அமைப்பை வாங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய ராணுவ வட்டாரங்கள் இந்தப் பேச்சு விரைவாக நடைபெற்று வருவதாகக் கூறுகின்றன.
அமெரிக்காவின் THAAD மற்றும் பேட்ரியாட் அமைப்புகளை ஏற்கனவே வைத்திருந்தாலும், ஆயுத கொள்முதலில் ஒரே நாட்டை மட்டும் சார்ந்திராமல் பல்வேறு நாடுகளிடம் இருந்து வாங்கும் உத்தியை UAE கையில் எடுத்துள்ளது. இந்தியாவுடனான ஒப்பந்தம் அமெரிக்க உறவை பாதிக்காது என அந்நாடு நம்புகிறது. இந்த ஒப்பந்தம் இறுதியானால், பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்குப் பிறகு பிரமோஸ் ஏவுகணையை வாங்கும் நான்காவது சர்வதேச நாடாக UAE மாறும்.
இதையும் படிங்க: 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 'NO SOCIAL MEDIA'..!! அரபு நாடுகளில் முதல் முன்னோடியாக திகழும் UAE..!!
கடந்தாண்டு இந்தியா-பாகிஸ்தான் மோதலின்போது பிரமோஸ் மற்றும் ஆகாஷ்தீர் அமைப்புகள் காட்டிய அபார செயல்திறன் உலக நாடுகளை கவர்ந்தது. இதனால் இந்திய ராணுவ ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் 38,424 கோடி ரூபாயைத் தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது.
பிரமோஸ் ஏவுகணை: இந்தியா-ரஷ்யா இணைந்து உருவாக்கிய உலகின் அதிவேக சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை இது. தரை, கடல் மற்றும் வான்தளங்களில் இருந்து எதிரி இலக்குகளை துல்லியமாக அழிக்கும் திறன் கொண்டது.
ஆகாஷ்தீர்: பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இந்திய ராணுவத்தால் முழுமையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தானியங்கி வான்பாதுகாப்பு அமைப்பு. எதிரி ஏவுகணைகள், போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்களை ரேடார் மூலம் கண்டறிந்து தானாகவே அழிக்கும் திறன் பெற்றது.
இந்திய பாதுகாப்பு ஏற்றுமதியில் பிரமோஸ் முக்கிய இடம் பிடித்துள்ள நிலையில், UAE உடனான ஒப்பந்தம் இந்தியாவின் உலகளாவிய ராணுவ வர்த்தகத்துக்கு பெரும் ஊக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாடுகளும் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும், பேச்சுவார்த்தைகள் சாதகமான முடிவை நோக்கி நகர்வதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவின் ‘ஆத்மநிர்பர்’ திட்டத்தின் வெற்றியை உலக அரங்கில் மேலும் உயர்த்தும் முக்கிய தருணமாக இது பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சிவசேனாவில் ஆபரேசன் டைகர்!! உத்தவ் கட்சி எம்.பி.,க்கள் 6 பேர் ஷிண்டே அணியில் ஐக்கியம்!