×
 

போர் விமானங்களுக்கு இனி வெளிநாட்டை நம்ப வேண்டாம்? இந்தியா எடுத்த அதிரடி முடிவு!

நம் விமானப் படை பயன்பாட்டில் உள்ள போர் விமானங்களுக்கான உதிரி பாகங்களில், 97 சதவீதம் உள்நாட்டிலேயே தயாரித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களுக்குத் தேவையான உதிரிபாகங்களில் 97 சதவீதம் தற்போது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஆத்மநிர்பார் பாரத்’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி மூலம் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.582 கோடி மதிப்பிலான அன்னிய செலாவணி சேமிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக சர்வதேச அளவில் ராணுவ தளவாடங்கள் மற்றும் உதிரிபாகங்களின் விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டது. இதன் தாக்கம் இந்திய விமானப்படையிலும் எதிரொலித்தது. குறிப்பாக ரஷ்ய தயாரிப்பான சுகோய், மிக் ரக போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களுக்குத் தேவையான பாகங்களை பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. அதேபோல் பிரான்ஸ் தயாரிப்பான மிராஜ், ரபேல் உள்ளிட்ட விமானங்களுக்கான சில உதிரிபாகங்கள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தச் சூழலில் வெளிநாட்டு விநியோகத்தை மட்டும் நம்பியிருப்பதை குறைக்கும் நடவடிக்கையில் விமானப்படை இறங்கியது. அதன் பராமரிப்பு பிரிவு, இந்தியாவின் பல்வேறு உள்நாட்டு நிறுவனங்களுடன் இணைந்து விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களுக்கான உதிரிபாகங்களை தயாரிக்கும் பணியை தீவிரப்படுத்தியது.

இதையும் படிங்க: ‘ஹனி டிராப்’ வலையில் சிக்கிய இந்திய விமானப்படை அதிகாரி? பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் கசியவிட்டதாக கைது

இதன் விளைவாக சுமார் 62,300 வகையான உதிரிபாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன. விமானிகளின் அவசரகால வெளியேற்ற அமைப்புகளில் பயன்படுத்தப்படும் பல்வேறு பாகங்கள், பேட்டரிகள், பவர் கார்ட்டுகள், டயர்கள், பாராசூட்கள் மற்றும் சுகோய்-30 விமானத்தில் பயன்படுத்தப்படும் ஹைட்ராலிக் பூஸ்டர் உள்ளிட்டவை இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.

வான் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் ஆகாஷ், சமர் ஏவுகணை அமைப்புகளும் உள்நாட்டு தொழில்நுட்பத்தின் முக்கிய உதாரணங்களாக உள்ளன. மேலும், உதிரிபாகங்களை விரைவாக தயாரிக்க 3டி பிரின்டிங் மையமும் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 முதல் செயல்பட்டு வரும் இந்த மையம், அவசர தேவைகளுக்கு பாகங்களை விரைவாக தயாரிக்க உதவி வருகிறது.

கடந்த இரு நிதியாண்டுகளில் விமானப்படையின் மூலதன பட்ஜெட்டில் 90 சதவீதம் உள்நாட்டு பொருட்களை வாங்குவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள விமானங்கள் மற்றும் அவற்றின் என்ஜின்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்கும் பணிகளும் ரஷ்ய நிறுவனங்கள் மற்றும் இந்திய தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: ஆவடியில் விமானப்படை தேர்வில் அதிர்ச்சி... ஆள்மாறாட்டம், ரகசிய கருவி மூலம் மோசடி; 4 பேர் கைது!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share