பாகிஸ்தானுக்கு SPY வேலை பார்த்த இந்திய விமானப்படை வீரர்..!! தட்டித்தூக்கிய அதிகாரிகள்..!!
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய விமானப்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அசாம் மாநிலத்தில் உள்ள திப்ருகாரில் (தேஜ்பூர் அருகே) அமைந்துள்ள சபுவா விமானப்படை நிலையத்தில் பல்நோக்கு ஊழியராக (மல்டி-டாஸ்கிங் ஸ்டாஃப் - MTS) பணியாற்றி வந்த சுமித் குமார் (வயது 36) என்பவர் பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு இந்திய ராணுவ ரகசியங்களை கசியவிட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தேசிய பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
சுமித் குமார் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் (அல்லாஹாபாத்) அருகேயுள்ள லஹூர்பூர் பகுதியைச் சேர்ந்தவர். அவர் 2023-ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பணத்திற்கு ஈடாக ரகசிய தகவல்களை பகிர்ந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கு கடந்த ஜனவரி மாதம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதிலிருந்து தொடங்கியது.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது சுமித் குமாரின் பெயர் வெளியாகியது. இதையடுத்து ராஜஸ்தான் உளவுத்துறை மற்றும் விமானப்படை உளவுத்துறை அதிகாரிகள் இணைந்து நடத்திய சிறப்பு நடவடிக்கையில் அசாமில் உள்ள சபுவா விமான நிலையத்தில் இருந்து சுமித் குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை ஜெய்ப்பூரில் உள்ள மத்திய விசாரணை மையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா மனிதநேய உதவி! 2.5 டன் மருத்துவ பொருட்கள் காபூல் சென்றடைந்தது!
விசாரணையில், சுமித் குமார் தனது பதவியை தவறாக பயன்படுத்தி, விமானப்படை நிலையங்களின் முக்கிய தகவல்களை சேகரித்து சமூக வலைதளங்கள் மூலம் பாகிஸ்தான் உளவாளிகளுக்கு அனுப்பியதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக, போர் விமானங்களின் இருப்பிடங்கள், ஏவுகணை அமைப்புகளின் விவரங்கள், பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்பான ரகசிய ஆவணங்கள் ஆகியவை இதில் அடங்கும். சபுவா விமான நிலையத்துடன், ராஜஸ்தானில் உள்ள பிகானேர் அருகேயுள்ள நல் விமானப்படை நிலையம் தொடர்பான தகவல்களும் கசியப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த கைது நடவடிக்கை இந்தியாவெங்கும் செயல்படும் பாகிஸ்தான் உளவு வலையமைப்பை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. அதிகாரிகள் இதனை Official Secrets Act மற்றும் புதிய குற்றவியல் சட்டங்களின் கீழ் பதிவு செய்துள்ளனர். மேலும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் தேசிய பாதுகாப்பு அமைப்புகளில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் கருதுகின்றன. இந்த சம்பவம் இந்திய ராணுவத்தின் உள் பாதுகாப்பு மற்றும் உளவு தடுப்பு நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.
இதையும் படிங்க: காபூல் மருத்துவமனை மீது தாக்குதல்! பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்!