பாக்., வயிற்றில் புளியை கரைக்கும் இந்தியா! லட்சம் வீரர்களுடன் களமிறங்கும் பைரவ் படை!
பாதுகாப்பு படைகளை மறுசீரமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், நவீன போர்க்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் அடங்கிய, 'பைரவ்' என்ற சிறப்பு படையை நம் ராணுவம் உருவாக்கி உள்ளது.
மத்திய அரசு பாதுகாப்புப் படைகளை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், இந்திய ராணுவம் நவீன போர்க்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பெரிய மாற்றத்தை செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ட்ரோன் இயக்குநர்களை உருவாக்கியுள்ளது. மேலும், 'பைரவ்' என்ற புதிய சிறப்புப் படையை உருவாக்கி, அதில் அனைத்து வீரர்களும் ட்ரோன் இயக்கத்தில் தேர்ச்சி பெற்றவர்களாக மாற்றியுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளில் நிலவும் அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு, உலகளாவிய போர்களில் இருந்தும் சொந்த அனுபவங்களில் இருந்தும் பாடம் கற்று இந்திய ராணுவம் இந்த மாற்றத்தை செய்துள்ளது. 'பைரவ்' படையின் வீரர்கள் அனைவரும் ஆளில்லா விமானங்களான ட்ரோன்களை இயக்கி, எதிரி இலக்குகளை துல்லியமாக கண்டறிந்து தாக்கும் திறன் கொண்டவர்கள்.
இவர்கள் அதிவேகமாக செயல்பட்டு எதிரி எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தும் வல்லமை பெற்றவர்கள். பாரா சிறப்பு படைக்கும் வழக்கமான காலாட்படைக்கும் இடையிலான இடைவெளியை நிரப்பும் பாலமாக இந்த பைரவ் படை செயல்படும்.
இதையும் படிங்க: மன்னிப்பு கேட்க மாட்டேன்!! ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து சர்ச்சை பேச்சு! காங்கிரஸ் மூத்த தலைவர் அடம்!
காலாட்படை பிரிவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு நவீன போர்த்திறனுக்கு ஏற்ப சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது 15 பைரவ் பட்டாலியன்கள் உருவாக்கப்பட்டு, பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளில் பல்வேறு படைப்பிரிவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையை விரைவில் 25 ஆக உயர்த்த ராணுவம் திட்டமிட்டுள்ளது.
ராஜஸ்தான் பாலைவனப் பகுதியின் சவால்களை எதிர்கொள்ள 'டெசர்ட் பைரவ் பட்டாலியன்' என்ற தனிப் பிரிவும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான வீரர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அப்பகுதியின் நிலப்பரப்பு, மொழி, வானிலை ஆகியவற்றை நன்கு அறிந்தவர்கள். பாலைவன சவால்களை தொழில்நுட்பத்துடன் இணைத்து தன்னிச்சையாக செயல்படும் திறன் இந்தப் படைக்கு உள்ளது என்று ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஐந்து மாதங்களாக தீவிர பயிற்சி பெற்ற இந்த வீரர்கள், 'அகண்ட பிரஹார்' என்ற கூட்டுப் பயிற்சியில் தங்களது வலிமையை நிரூபித்துள்ளனர். இதுதவிர, 'ருத்ரா பிரிகேட்கள்' என்ற புதிய அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் காலாட்படை, பீரங்கிப்படை, இயந்திரமயமாக்கப்பட்ட பிரிவுகள், ட்ரோன் பிரிவுகள் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே கட்டளையின் கீழ் செயல்படும். இதன் மூலம் இந்திய ராணுவம் தொழில்நுட்ப ரீதியாக வலிமையான, வேகமான மற்றும் தீர்க்கமான படையாக உருவெடுத்துள்ளது.
எந்தவொரு தாக்குதலையும் சமாளிக்கும் திறன் கொண்ட இந்த சிறப்புப் படை, நவீன தொழில்நுட்ப காலத்துக்கு ஏற்ப வீரர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறது. இந்த மாற்றங்கள் இந்திய ராணுவத்தை எதிர்கால போருக்கு முழுமையாக தயாராக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: உள்நாட்டு ஆயுத உற்பத்தியால் ₹2.64 லட்சம் கோடி சேமிப்பு: டிஆர்டிஓ-வை பாராட்டி தள்ளிய மத்திய அரசு!