×
 

விண்வெளியில் கேரட் அல்வா.. இது இஸ்ரோ ட்ரீட்.. வெளுத்துக் கட்டிய சுபான்ஷு சுக்லா..

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, இஸ்ரோ அளித்த சிறப்பு விருந்தில் அங்கிருந்தவர்களுக்கு நம் நாட்டு கேரட் அல்வாவை பரிமாறினார்.

ஆக்சியம்-4 (Axiom Mission 4) என்பது அமெரிக்காவைச் சேர்ந்த ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனம், ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் நாசாவுடன் இணைந்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) உள்ளிட்ட பன்னாட்டு கூட்டாளிகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட தனியார் விண்வெளிப் பயணத் திட்டமாகும். இத்திட்டம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) மனிதர்களை அனுப்புவதை நோக்கமாகக் கொண்டது. 2025 ஜூன் 25 அன்று அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் இப்பயணம் வெற்றிகரமாகத் தொடங்கியது. இத்திட்டத்தின் மூலம் இந்தியாவின் இரண்டாவது விண்வெளி வீரராக சுபான்ஷு சுக்லா வரலாற்றில் இடம்பிடித்தார்.

சுபான்ஷு சுக்லா, உத்தரப் பிரதேசத்தின் லக்னோவைச் சேர்ந்த இந்திய விமானப்படை வீரர் ஆவார். 1985 அக்டோபர் 10 இல் பிறந்த இவர், ஆக்சியம்-4 திட்டத்தில் பைலட்டாகப் பங்கேற்று, 1984 இல் ராகேஷ் ஷர்மாவுக்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற முதல் இந்தியரானார். இவரது பயணம் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிக்கு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

இத்திட்டத்த்யை ஆக்சியம் ஸ்பேஸ், நாசா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் இஸ்ரோ இணைந்து செயல்படுத்தின. ஆக்சியம்-4 குழுவில் நான்கு விண்வெளி வீரர்கள் இடம்பெற்றனர்: கமாண்டர் பெக்கி விட்சன் (அமெரிக்கா, ஆக்சியம் ஸ்பேஸ்), பைலட் சுபான்ஷு சுக்லா (இந்தியா, இஸ்ரோ), ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி (போலந்து, ஐரோப்பிய விண்வெளி முகமை), மற்றும் திபோர் கபு (ஹங்கேரி). இவர்கள் 14 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: பூமி திரும்ப நேரம் குறிச்சாச்சு! 230 சூரிய உதயத்தை பார்த்த சுபான்ஷு சுக்லா.. நீளும் சாதனைகள் லிஸ்ட்..!

பயணத்தின் போது பல சிக்கல்கள் எழுந்தன. முதலில், ஜூன் 11, 2025 அன்று திட்டமிடப்பட்ட ஏவுதல் திரவ ஆக்ஸிஜன் கசிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. மேலும், விண்வெளி நிலையத்தின் ஸ்வெஸ்டா மாட்யூலில் ஏற்பட்ட கசிவு காரணமாக மேலும் இரண்டு வாரங்கள் தாமதமானது. இறுதியாக, ஜூன் 25 அன்று விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது, ஆனால் கீழ் வட்டப் பாதையில் உள்ள கழிவுகள் மற்றும் Max Q எனப்படும் அதிகபட்ச ஏரோடைனமிக் அழுத்தம் போன்ற சவால்களை எதிர்கொண்டது.

விண்வெளி நிலையத்தில், குழு 60 அறிவியல் சோதனைகளை மேற்கொண்டது. இதில் இந்தியாவின் தார்வாடு இந்திய தொழில்நுட்ப கழகம் மற்றும் விவசாய பல்கலைக்கழகம் இணைந்து "விண்வெளியில் பயிறு மற்றும் வெந்தய கீரை விதைகள் முளைத்தல்" குறித்த ஆய்வு முக்கியமானது.

மேலும், நுண்ணீர்ப்பு, நீரிழிவு நோய் ஆராய்ச்சி, மற்றும் புற்றுநோய் செல்களைத் தடுக்கும் மருந்துகளின் செயல்திறன் ஆய்வுகளும் நடத்தப்பட்டன. இந்த ஆய்வுகள் எதிர்காலத்தில் சந்திரன் மற்றும் செவ்வாயில் குடியிருப்புகளை அமைப்பதற்கு முக்கிய பங்களிப்பு அளிக்கும்.

வரும் 14ம் தேதி, சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினர் பூமிக்கு திரும்புகின்றனர். அதற்கு முன்னதாக விண்வெளியில் சமையல் மற்றும் கலாசார பரிமாற்றமாக விருந்து அளிக்கப்பட்டது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மற்றும் டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தால் இந்த சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

அதில், இறால், சிக்கன், இனிப்பு ரொட்டி உள்ளிட்ட உணவு வகைகள் இடம்பெற்றிருந்தன. இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் தன் சக தோழர்களுக்காக கேரட் அல்வாவை பரிமாறினார்.

இதை, அவர் தன் வீட்டில் சமைத்து உடன் எடுத்து சென்றிருந்தார். நுண் ஈர்ப்பு விசைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்ட இந்திய உணவு வகைகளை விண்வெளி பயணங்களில் கொண்டு சென்று பழக்கப்படுத்துவது, சர்வதேச ஒத்துழைப்பில் வளர்ந்து வரும் பங்கை காட்டுவதாக இஸ்ரோ தெரிவித்தது.

இதையும் படிங்க: மீண்டும் மீண்டுமா? இதுக்கு இல்லையா சார் எண்டு? சுபான்ஷு சுக்லா விண்வெளி பயணத்தில் புது சிக்கல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share