பஞ்சாப் வழியாக பயங்கர ஆயுதங்கள் கடத்தல்!! பாக். ஐஎஸ்ஐ சதி! இந்தியாவுக்கு எதிராக வலை!
சீனா மற்றும் துருக்கி நாடுகளில் தயாராகும் அதிநவீன துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பஞ்சாப் வழியாக இந்தியாவுக்குள் அனுப்பும் வேலையை ஐஎஸ்ஐ உளவு அமைப்பு செய்து வருகிறது.
டெல்லி போலீசின் சிறப்புப் பிரிவு பெரும் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் உதவியுடன் வட இந்தியாவில் ரவுடிகளுக்கு நவீன ஆயுதங்களை கடத்தி வழங்கிய கும்பலைச் சேர்ந்த நான்கு பேரை கைது செய்துள்ளது. இவர்களிடமிருந்து துருக்கி மற்றும் சீனாவில் தயாரிக்கப்பட்ட 10 அதிநவீன கைத்துப்பாக்கிகளும், 92 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 19-ஆம் தேதி இரவு ரோஹிணி பகுதியில் ரகசியத் தகவல் அடிப்படையில் மறைந்திருந்த போலீசார், பஞ்சாபைச் சேர்ந்த மந்தீப், தல்விந்தர் ஆகிய இருவரை மடக்கிப் பிடித்தனர். இவர்கள் ஆயுதங்களை கேங்ஸ்டர்களிடம் ஒப்படைக்க வந்தவர்கள்.
இவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் மேலும் இரு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்து உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ரோஹன் தோமர், டில்லியைச் சேர்ந்த அஜய் (மோனு) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: மெட்ரோவை வைத்து அரசியல்… நல்லா இருக்கு முதல்வரே… அண்ணாமலை கடும் விமர்சனம்…!
விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கும்பல், பாகிஸ்தான் வழியாக பஞ்சாப்பிற்கு டிரோன்கள் மூலம் ஆயுதங்களை கடத்தி வந்துள்ளது. பின்னர் அவை டில்லி, அரியானா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள ரவுடி கும்பல்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, லாரன்ஸ் பிஷ்னோய், தேவிந்தர் பாம்பிஹா, கோஹி ஹிமான்ஷு பாய் ஆகியோரது கும்பல்களுக்கு இந்த ஆயுதங்கள் சென்றதாகத் தெரியவந்துள்ளது.
ஐஎஸ்ஐ உளவு அமைப்பு இந்த ஆயுதக் கடத்தலுக்கு நிதி, தொடர்பு, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த ஆயுதங்கள் அடுத்த சில நாட்களில் கொலை, கடத்தல் உள்ளிட்ட பெரும் குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட இருந்ததாக போலீஸ் தெரிவித்துள்ளது.
டில்லி போலீஸ் இணை கமிஷனர் சுரேந்தர் குமார் கூறுகையில், “இந்தக் கைது நடவடிக்கையால் வட இந்தியாவில் பல பெரிய குற்றச் செயல்கள் தடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கும்பலுடன் ஐஎஸ்ஐ-க்கு நேரடித் தொடர்பு இருக்கிறதா, இதுவரை எவ்வளவு ஆயுதங்கள் கடத்தப்பட்டன, வேறு எந்த ரவுடி கும்பல்களுக்கு வழங்கப்பட்டன என்பது குறித்து தீவிர விசாரணை நடக்கிறது” என்றார்.
சமீபத்தில் டில்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு பாதுகாப்பு பலமாக்கப்பட்ட நிலையில் இந்த பெரும் பிடி, பயங்கரவாதம் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிரான போரில் முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கிட்டத்தட்ட நெருங்கியாச்சு... SIR விண்ணப்ப படிவங்கள்... முக்கிய தகவல் கொடுத்த தேர்தல் ஆணையம்...!