விண்வெளிக்கு பறக்கும் முதல் ஆளில்லா ராக்கெட் இந்தாண்டுக்குள் அனுப்பப்படும்! இஸ்ரோ தலைவர் உறுதி!
மூன்று நேவிகேஷன் செயற்கைக்கோள்கள் செயல்பட்டு வருகின்றன. என்விஎஸ்-03 நேவிகேஷன் தொழில்நுட்பத்திற்காக ஏவப்படும் நான்காவது செயற்கைக்கோளாகும்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது அடுத்த தலைமுறை நேவிகேஷன் செயற்கைக்கோளான என்விஎஸ்-03-ஐ விண்ணில் ஏவ தயாராகி வருகிறது. அக்டோபர் 30ம் தேதி இரவு 11 மணி 51 நிமிடங்களுக்கு ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து ஜிஎஸ்எல்வி-எஃப்18 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் ஏவப்படவுள்ளது.
இந்த ஏவுதலுக்கு முன்னதாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தலைமையிலான குழு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செயற்கைக்கோள் மாதிரியை வைத்து சுவாமி தரிசனம் செய்து ஆசீர்வாதம் பெற்றது. இது இஸ்ரோவின் முக்கிய ஏவுதல்களுக்கு முன் நீண்டகாலமாகப் பின்பற்றப்படும் மரபாகும்.
செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், இந்தாண்டில் மட்டும் இது ஐந்தாவது செயற்கைக்கோள் ஏவுதல் என்றும், ஒரு தனியார் செயற்கைக்கோளையும் ஏவியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரூ.200க்கு 10 மளிகை பொருட்கள்..! கூட்டுறவு அங்காடிகளில் வழங்க முடிவு..! தமிழக அரசு அறிவிப்பு.!
ஏற்கனவே மூன்று நேவிகேஷன் செயற்கைக்கோள்கள் செயல்பட்டு வருகின்றன. என்விஎஸ்-03 நேவிகேஷன் தொழில்நுட்பத்திற்காக ஏவப்படும் நான்காவது செயற்கைக்கோளாகும். இதன் மூலம் பிஎன்டி (நிலைப்படுத்துதல், வழிகாட்டுதல், கால அளவீட்டு) சேவைகள் உள்ளிட்ட பல பயன்பாடுகள் கிடைக்கும் என்றார்.
என்விஎஸ்-03 சுமார் 2,250 கிலோகிராம் எடை கொண்டது. இதில் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட அணுக் கடிகாரம் உட்பட பிற கடிகாரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. எல்5 மற்றும் எஸ் சிக்னல்களுடன் எல்1 சிக்னலையும் வழங்கும். இந்தியாவின் நிலப்பரப்பு மற்றும் அதற்கு அப்பால் சுமார் 1,500 கிமீ வரை உள்ள பகுதிகளுக்கு நேவிகேஷன் சேவைகளை வழங்கும் நோக்கில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சொந்த நேவிகேஷன் அமைப்பான நேவிக் (NavIC) தொடர்ச்சியை உறுதி செய்வதற்கான இரண்டாம் தலைமுறை தொடரில் இது மூன்றாவது செயற்கைக்கோளாகும். ஜிஎஸ்எல்வி-எஃப்18 இன் 20வது விமானமாக இந்த ஏவுதல் அமைகிறது.
ககன்யான் திட்டம் குறித்து பேசிய நாராயணன், 8,000 பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளதாகவும், மனிதர்களை அனுப்புவதற்கு முன் மூன்று ஆளில்லா ராக்கெட்டுகள் அனுப்பி சோதனை செய்யப்படும் என்றும் தெரிவித்தார். முதல் ஆளில்லா ராக்கெட் இந்தாண்டுக்குள் அனுப்பப்படும் என்றார். விண்வெளி வீரர்களின் பாதுகாப்பு முதன்மையானது என்பதை அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: விஜய் பாணியில் மாணவர்களை குறிவைக்கும் தனுஷ்!! 234 தொகுதிகளிலும் ஏசி டியூஷன் சென்டர்! ஜனவரியில் தொடக்கம்!