இந்திய பொருளாதாரத்துக்கு புதிய பாதை!! சப்தமே இல்லாமல் இஸ்ரோ செய்து வரும் சாதனை!
இந்திய விண்வெளி ஆய்வு மையமான 'இஸ்ரோ', நேற்று வணிக ரீதியிலான, அமெரிக்க தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை புவி வட்டப்பாதையில் செலுத்தி, இந்திய பொருளாதாரத்துக்கு புதிய பாதையை திறந்துள்ளது.
ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, நேற்று (டிசம்பர் 24, 2025) அமெரிக்காவைச் சேர்ந்த ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைல் நிறுவனத்தின் 'புளூபேர்ட் பிளாக் 2' தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தியது.
இந்தியாவின் மிகச் சக்தி வாய்ந்த எல்விஎம்3-எம்6 ராக்கெட் மூலம் இந்த ஏவுதல் நடைபெற்றது. இது இஸ்ரோவின் வணிக ரீதியிலான ஏவுதல்களில் புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து காலை 8.55 மணிக்கு ராக்கெட் விண்ணை நோக்கி பயணித்தது. சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு 6,100 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள் துல்லியமாக புவி தாழ் வட்டப்பாதையில் (லோ எர்த் ஆர்பிட்) நிலைநிறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: ஜப்பானே அசந்து போச்சு!! இந்தியா செய்த அசத்தல் சாதனை!! இஸ்ரோ தலைவர் ருசிகர தகவல்!!
இது இஸ்ரோவின் எல்விஎம்3 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட மிகக் கனமான வணிக செயற்கைக்கோள் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதற்கு முன்பு நவம்பர் 2-ம் தேதி ஏவப்பட்ட செயற்கைக்கோள் 4,400 கிலோ எடை கொண்டதாக இருந்தது.
இந்த ஏவுதல் இஸ்ரோவின் வணிகப் பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்எஸ்ஐஎல்) மற்றும் அமெரிக்க நிறுவனமான ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைல் இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடைபெற்றது.
'புளூபேர்ட் பிளாக் 2' செயற்கைக்கோள் 4ஜி, 5ஜி தொழில்நுட்பம் கொண்ட மொபைல் போன்களுக்கு நேரடியாக உயர்தர ஆடியோ, வீடியோ அழைப்புகள், இணைய சேவைகளை வழங்கும் திறன் கொண்டது. மொபைல் டவர் இல்லாத இடங்களிலும், கடல் நடுவில், மலைகளில், தொலைதூர பகுதிகளிலும் இது துல்லியமான சேவையை வழங்கும். இதனால் உலகளாவிய தொலைத்தொடர்பு துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி இந்த சாதனையைப் பாராட்டி, "இந்திய இளைஞர்களின் சக்தியால் நமது விண்வெளித் திட்டம் மேலும் முன்னேறுகிறது. எல்விஎம்3 ராக்கெட்டின் நம்பகத்தன்மை ககன்யான் போன்ற எதிர்கால திட்டங்களுக்கு அடித்தளமாக அமைகிறது. வணிக ஏவுதல்களை விரிவுபடுத்தி உலகளாவிய கூட்டாண்மையை வலுப்படுத்துகிறது" என்று தெரிவித்தார். வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் இஸ்ரோவை வாழ்த்தினார்.
1960களில் அமெரிக்க உதவியுடன் இஸ்ரோ தனது முதல் செயற்கைக்கோளை ஏவியது. இப்போது அமெரிக்க நிறுவனமே தனது மிகச் சக்தி வாய்ந்த செயற்கைக்கோளை ஏவ இந்தியாவை நாடியுள்ளது.
இது இந்திய விண்வெளி தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை உலகிற்கு காட்டுகிறது. இஸ்ரோவின் இந்த சாதனை இந்திய பொருளாதாரத்துக்கு புதிய வாய்ப்புகளைத் திறந்து, உலக வணிக விண்வெளி சந்தையில் இந்தியாவின் இடத்தை வலுப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விண்வெளி உலகில் இந்தியா தொடர்ந்து உயரப் பறக்கிறது!! பாகுபலியை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோவுக்கு மோடி பாராட்டு!