கர்நாடகாவின் புதிய அமைச்சரவை.. இடம்பிடித்த 20 பேர் யார்? வெளியான உத்தேச பட்டியல்!
அரசியலமைப்புச் சட்டப்படி முதல்வர் உட்பட 34 பேர் வரை அமைச்சர்களாக இருக்க முடியும் என்பதால் 20 இடங்கள் காலியாக உள்ளன.
முதல்வர் டி.கே. சிவக்குமார் தலைமையிலான கர்நாடகா அரசு பதவியேற்று சுமார் இரண்டு மாதங்கள் ஆகியும் முழு அமைச்சரவை உருவாகாமல் இருந்த நிலைமை இப்போது முடிவுக்கு வர வாய்ப்புள்ளது. நாளை (ஆகஸ்ட் 3) ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் முதல்வர் சித்தராமையா கடந்த மே 28-ல் பதவி விலகியதை அடுத்து, ஜூன் 3-ம் தேதி டி.கே. சிவக்குமார் முதல்வராகப் பொறுப்பேற்றார். அப்போது துணை முதல்வர் ஜி. பரமேஸ்வரருடன் 12 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்றனர். இதனால் தற்போது அமைச்சரவையில் மொத்தம் 14 பேர் மட்டுமே உள்ளனர். அரசியலமைப்புச் சட்டப்படி முதல்வர் உட்பட 34 பேர் வரை அமைச்சர்களாக இருக்க முடியும் என்பதால் 20 இடங்கள் காலியாக உள்ளன.
இந்த நீண்ட தாமதம், சாதி, பிராந்திய, பாலின மற்றும் தலைமுறை சமநிலையை உறுதிப்படுத்தும் முயற்சிகளால் ஏற்பட்டது எனக் கூறப்படுகிறது. அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக முதல்வர் சிவக்குமாரும் முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்தினர். அதன் அடிப்படையில் 20 பேரின் உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: கர்நாடக மக்களின் நலனே முதல் குறிக்கோள்.. காவிரி விவகாரத்தில் டி.கே. சிவக்குமார் விளக்கம்..!!
அஜய் தரம் சிங், யஷ்வந்தராய கவுடா பட்டீல், சரத் பச்சேகவுடா, ரிஷ்வான் அர்சத், ஏ.எஸ். பொன்னண்ணா, எஸ்.எஸ். மல்லிகார்ஜுன், லட்சுமண் சவதி, ரகுமூர்த்தி, அன்னபூர்ணா துக்காராம், விஜயானந்த் காசப்பனவர், புட்டரங்க செட்டி, ருத்ரப்பா லமானி, ஆனேக்கல் சிவண்ணா, செலுவராயசாமி, சந்தோஷ் லாட், சிவலிங்கேகவுடா, பங்கார்பேட்டை நாராயணசாமி, ஜமீர் அகமது கான், லட்சுமி ஹெப்பால்கர் உள்ளிட்டோர் இதில் அடங்குவர்.
இது உத்தேசப் பட்டியல் மட்டுமே. இறுதிப் பட்டியல் இன்று இரவு அல்லது நாளை காலை காங்கிரஸ் மேலிடத்தால் உறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 13-ல் தொடங்கும் சட்டசபை மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன் அமைச்சரவையை முழுமையாக்கும் நோக்கத்தில் இந்த விரிவாக்கம் நடைபெறுகிறது. புதிய முகங்களுடன் அரசு மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "கர்நாடகா வராதீங்க விஜய்"..! தொடரும் பதற்றம்... டி.கே. சிவகுமார் வார்னிங்..!