பெங்களூர் கூட்ட நெரிசல் சம்பவம்: கோலியின் வீடியோவும் ஒரு காரணம்.. வெளியான ரிப்போர்ட்..!
பெங்களூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், ஆர்சிபி அணி நிர்வாகமே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி வென்று கோப்பையை வென்றது. ஐபிஎல் தொடங்கப்பட்டு கடந்த 18 ஆண்டுகளில் ஆர்சிபி கோப்பையை வெல்வது இதுவே முதல்முறையாகும். எனவே இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் பெங்களூரில் வெற்றி கொண்டாட்டப் பேரணி நடந்தது.
பெங்களூரு எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த ஜூன் 4ம் தேதி அன்று நடந்த ஆர்.சி.பி. வெற்றி ஊர்வலத்தின்போது ஏற்பட்ட கூட்டநெரிசல் சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த கோர சம்பவம் குறித்து கர்நாடக அரசு அமைத்த ஒரு நபர் விசாரணை ஆணையம், ஓய்வு பெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா தலைமையில் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கை, கர்நாடக கிரிக்கெட் வாரியம், ஆர்.சி.பி., மற்றும் டி.என்.ஏ. நிர்வாகத்தின் கவனக்குறைவே இந்த விபத்துக்கு முக்கிய காரணம் எனக் கூறுகிறது.
இதையும் படிங்க: மறக்க முடியுமா..!! பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம்.. வெளியான முக்கிய தகவல்..!
அறிக்கையில், நிகழ்ச்சியை ஒழுங்காகத் திட்டமிடாதது, பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்ட பிழைகள், மற்றும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தத் தவறியது ஆகியவை விபத்துக்கு வழிவகுத்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், நிகழ்ச்சியை ரத்து செய்திருந்தால் கலவரம் ஏற்பட்டிருக்கலாம் என அரசு தரப்பில் கூறப்பட்டாலும், இந்த முடிவு பொறுப்பற்றதாக இருந்ததாக விமர்சனம் எழுந்துள்ளது.
இந்த அறிக்கை ஆர்.சி.பி. மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என தெரிவிக்கிறது. விராட் கோலி உள்ளிட்ட முக்கிய நபர்களின் பெயர்களும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக இந்த சம்பவத்திற்கு விராட் கோலியின் வீடியோவும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. கடந்த ஜூன் 4ம் தேதி அன்று காலை 8:55 மணிக்கு, விராட் கோலி தனது சமூக வலைதளத்தில், "பெங்களூரு மக்களுடன் வெற்றியை கொண்டாட விரும்புவதாக" ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். இதன் எதிரொலியாக, சுமார் மூன்று லட்சம் மக்கள் வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்க குவிந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு முறையான அனுமதி பெறப்படவில்லை; வெறும் பேரணி பற்றிய தகவல் மட்டுமே காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்டதாக அறிக்கை குறிப்பிடுகிறது. இதனால், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் இந்த துயர சம்பவம் நிகழ்ந்ததாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் பொது நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கமைப்பு முக்கியத்துவத்தை மீண்டும் உணர்த்தியுள்ளது.
கர்நாடக முதலமைச்சருக்கு சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையின் அடிப்படையில், அரசு மற்றும் ஆர்.சி.பி. நிர்வாகம் மீது அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி பறிபோன 3 உயிர்கள்.. ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!