கேரள சட்டசபையில் அதிரடி தீர்மானம்: தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தல்!!
இரண்டாவதாக, நடுநிலை குறித்து கேள்விகள் எழுந்துள்ள தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியத் தேர்தல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவில் கேரள சட்டப்பேரவை இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியிலிருந்து நீக்கக் கோரியும், வாக்காளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை சரிசெய்யக் கோரியும் இந்தத் தீர்மானம் நிறைவேறியது.
முதலமைச்சர் வி.டி. சதீசன் முன்மொழிந்த இந்தத் தீர்மானத்துக்கு ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் எதிர்க்கட்சியான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆகிய இரு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். பாஜகவைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வாக்காளர் பட்டியலுக்கான சிறப்புத் தீவிரத் திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) நடைமுறையில் தகுதியுள்ள பல லட்சம் வாக்காளர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் நீக்கப்பட்டதாகவும், தேர்தல் ஆணையத்தின் நடுநிலைத்தன்மை குறித்து கடுமையான சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் ஆணையர் படம் எரிப்பு... சாலை மறியல்! உளுந்தூர்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் கைது!
நாடு முழுவதும் இந்தப் பிரச்சினை தொடர்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகள் கண்டனப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், டெல்லியிலும் பல்வேறு மாணவர் குழுக்களும் எதிர்க்கட்சித் தலைவர்களும் ஆணையர் பதவி விலகக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முதலமைச்சர் சதீசன் தனது சமூக வலைதளப் பதிவில், “நமது தேர்தல் நடைமுறையின் நேர்மை என்பது சமரசம் செய்துகொள்ள முடியாத ஒன்று. வாக்காளர் பட்டியல் திருத்தங்கள், தகுதியுள்ள வாக்காளர்களின் உரிமை பறிப்பு மற்றும் ஆணையத்தின் நடுநிலை குறித்த கவலைகளைப் புறக்கணிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார். இந்தத் தீர்மானத்தின் மூலம் கேரளம் மூன்று முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
முதலாவதாக, எஸ்.ஐ.ஆர். நடைமுறையில் உள்ள குறைபாடுகளை உடனடியாகச் சரிசெய்து, தவறாக நீக்கப்பட்ட அனைத்துத் தகுதியுள்ள வாக்காளர்களின் வாக்குரிமையையும் மீட்டளிக்க வேண்டும். இரண்டாவதாக, நடுநிலை குறித்து கேள்விகள் எழுந்துள்ள தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மூன்றாவதாக, தேர்தல் ஆணையர்களைத் தேர்வு செய்யும் குழுவை மறுசீரமைக்க வேண்டும். அக்குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்தியத் தலைமை நீதிபதி ஆகியோர் இடம்பெற வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆணையத்தின் சுதந்திரமும் நம்பகத்தன்மையும் உறுதிப்படுத்தப்படும் எனத் தீர்மானம் வலியுறுத்துகிறது.
வாக்களிக்கும் உரிமை ஜனநாயகத்தின் அடித்தளம் என்றும், குடிமக்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாப்பதே முன்னுரிமை என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். சுதந்திரமான, நியாயமான தேர்தலுக்காக கேரளம் உறுதியுடன் நிற்பதாக அவர் அறிவித்துள்ளார். இந்தத் தீர்மானம், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்த தேசிய அளவிலான விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தலைமை செயலகமே இருளில் மூழ்கியது! அறிவிக்கப்படாத மின்வெட்டுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!