‘நீங்கள் அவை தலைவருக்கு உத்தரவிட முடியாது’! கார்கேவுக்கு கிரண் ரிஜிஜு பதிலடி! ராஜ்யசபாவில் காரசார விவாதம்!
எதிர்க்கட்சிகள் எந்த விதிமுறையையும் மேற்கோள் காட்டாமல் கோரிக்கைகளை முன்வைத்து வருவதாகவும், அவைத் தலைவரிடம் கோரிக்கை வைக்கலாம், ஆனால் கட்டளையிட முடியாது என்றும் ரிஜிஜு தெரிவித்தார்.
ராஜ்யசபாவில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவையில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திய நிலையில், இந்த விவகாரம் இன்று ராஜ்யசபாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவை தொடங்கியதும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் அவைக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர். இதனால் அவையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ராஜ்யசபாவுக்கு வரவழைத்து சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு அவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: ராகுல்-கிரண் ரிஜிஜு அவசர சந்திப்பு... முக்கிய மசோதாக்களில் உடன்பாடு எட்டப்படாததால் மீண்டும் முடங்கும் நாடாளுமன்றம்!
இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, எதிர்க்கட்சியின் கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கடந்த ஏழு நாட்களாக ஒரே விவகாரத்தை தொடர்ந்து எழுப்பி வருவதாகக் குறிப்பிட்ட அவர், அவை நடைமுறைகளின்படி அவைத் தலைவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றார்.
மேலும், எதிர்க்கட்சிகள் எந்த விதிமுறையையும் மேற்கோள் காட்டாமல் கோரிக்கைகளை முன்வைத்து வருவதாகவும், அவைத் தலைவரிடம் கோரிக்கை வைக்கலாம், ஆனால் கட்டளையிட முடியாது என்றும் ரிஜிஜு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியை தவறாக பயன்படுத்தக் கூடாது என்றும், ஒரே பிரச்சினையை மீண்டும் மீண்டும் எழுப்புவது அவை நடைமுறைக்கு ஏற்ப அல்ல என்றும் அவர் கூறினார்.
அத்துடன், காங்கிரஸ் எம்.பி.க்கள் விதிமுறைகளைப் பின்பற்றாமல் செயல்படுவதாகவும், அவர்களின் தலைமை அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்கவில்லை என்றும் ரிஜிஜு விமர்சித்தார். இதனால் அவையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
டெல்லி மாணவர் போராட்டம், போலீஸ் நடவடிக்கை மற்றும் அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மையமாகக் கொண்டு நாடாளுமன்றத்தில் அரசியல் மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.
இதையும் படிங்க: பாராளுமன்றத்தில் மீண்டும் அமளி! அமித் ஷா ராஜினாமா கோரி எதிர்க்கட்சிகள் முழக்கம்! லோக்சபா ஒத்திவைப்பு!