×
 

பாராளுமன்றத்தில் மீண்டும் அமளி! அமித் ஷா ராஜினாமா கோரி எதிர்க்கட்சிகள் முழக்கம்! லோக்சபா ஒத்திவைப்பு!

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மீண்டும் அமளி வெடித்தது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் லோக்சபா மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ராஜ்யசபாவும் பாதிக்கப்பட்டது.

டெல்லியில் நடைபெற்று வரும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இன்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக லோக்சபா மற்றும் ராஜ்யசபாவின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. லோக்சபா கூடிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதால், சபாநாயகர் ஓம் பிர்லா அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்தார்.

கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கிய மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13 வரை நடைபெற உள்ளது. ஆனால் தொடக்க நாளிலிருந்தே பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, நீட் தேர்வு தொடர்பான சர்ச்சைகள், மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது டெல்லி ஜந்தர் மந்தரில் காவல்துறை தடியடி நடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு உள்ளிட்ட விவகாரங்கள் அவையில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

இன்றைய கூட்டத்திலும் மாணவர்கள் மீதான தடியடி மற்றும் பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். இதையடுத்து அவையில் கடும் அமளி நிலவியதால், கேள்வி நேரம் மற்றும் பிற அலுவல்கள் நடைபெறாமல் சபை ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிங்க: உதயநிதி கைது எதிரொலி! டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் திடீர் போராட்டம்!

இதற்கிடையில், ராஜ்யசபாவும் காலை 11 மணிக்கு கூடிய நிலையில், அங்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை முதலில் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அவை கூடியபோதும், அரசியல் பதற்றம் தொடர்ந்தது.

மழைக்கால கூட்டத்தொடரின் முதல் இரண்டு வாரங்களிலேயே லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் முக்கிய சட்ட மசோதாக்கள் மற்றும் அரசின் அலுவல்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியான அமளி காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் சீராக நடைபெறாத நிலை உருவாகியுள்ளது. இந்த சூழலில், மத்திய அரசு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான மோதல் மேலும் தீவிரமடையும் அறிகுறிகள் தென்படுகின்றன.

இதையும் படிங்க: டெல்லியில் சசி தரூரின் ‘மாம்பழ விருந்து’... ராகுல் ஏன் வரவில்லை? காங்கிரஸில் மீண்டும் பரபரப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share