×
 

ரஷ்ய ராணுவத்தில் கட்டாயப்பணி: 26 இந்தியர்கள் உயிரிழப்பு; 7 பேர் மாயம் - மத்திய அரசு தகவல்!

ரஷ்ய ராணுவத்தில் கட்டாயப்படுத்தி பணியாற்றிய இந்தியர்கள் 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 7 பேர் மாயமாகி உள்ளதாக மாநிலங்களவையில் வெளியுறவு இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.

வேலை தேடி வெளிநாடு சென்று, ரஷ்ய - உக்ரைன் போர்க்களத்தில் ரஷ்ய ராணுவத்திற்காகக் கட்டாயப்படுத்திப் பணியமர்த்தப்பட்ட இந்திய இளைஞர்கள் குறித்த அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களை மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார்.

அமைச்சர் சமர்ப்பித்த பதிலில், ரஷ்ய ராணுவத்தில் பல்வேறு பணிகளுக்காகச் சேர்ந்து, உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட்டு இதுவரை 26 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், போர்க்களத்தில் பணியாற்றியவர்களில் 7 இந்தியர்கள் மாயமாகி உள்ளதாகவும், அவர்களைக் கண்டறியும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஏமாற்றப்பட்டும், கட்டாயப்படுத்தப்பட்டும் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட இந்தியர்களைத் தாயகம் அழைத்து வர இந்திய அரசு விசாரணைகளையும், தூதரக ரீதியான அழுத்தங்களையும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.

இதுவரை ரஷ்ய ராணுவத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுத் தாயகம் திரும்பியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான இழப்பீடு மற்றும் உடல்களைக் கொண்டு வருதல் போன்ற விவகாரங்களில் ரஷ்ய அரசுடன் வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகக் குறிப்பிட்டார். ஏஜென்ட்களால் ஏமாற்றப்பட்டுப் போர்க்களத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இளைஞர்களின் இந்தத் துயரச் சம்பவம், மாநிலங்களவையில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களைக் கண்காணிக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: "ரஷ்யா - உக்ரைன் போர் மூன்றாம் உலகப் போராக மாறக்கூடும்" - ட்ரம்ப் எச்சரிக்கை!


 

இதையும் படிங்க: "அமெரிக்காவுக்கு உரிமை இருக்கும்போது இந்தியாவுக்கு ஏன் தடை? ரஷ்ய எண்ணெய் கொள்முதல் குறித்து புதின் கேள்வி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share