திருப்பதி லட்டு ஊழல்: "லஞ்சம் வாங்கினேன்" என ஒப்புக்கொண்ட அதிகாரிக்கு ஜாமீன் மறுப்பு!
திருப்பதி லட்டு கலப்பட நெய் விவகாரத்தில் ரூ.83 லட்சம் லஞ்சம் பெற்றதை ஒப்புக்கொண்ட தேவஸ்தான அதிகாரி விஜயபாஸ்கர் ரெட்டியின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
திருப்பதி லட்டு தயாரிக்கக் கலப்பட நெய்யை அனுமதித்ததற்காகப் பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக தேவஸ்தான அதிகாரி விஜயபாஸ்கர் ரெட்டி பகிரங்க வாக்குமூலம் அளித்துள்ளார். அவரது குற்றச்சாட்டுகளின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, நெல்லூர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க அதிரடியாக மறுத்துவிட்டது.
உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் தயாரிப்பில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரம், தற்போது அதிகாரிகளின் லஞ்ச ஊழல் வாக்குமூலத்தால் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில் கைதாகிச் சிறையில் இருக்கும் தேவஸ்தான அதிகாரி விஜயபாஸ்கர் ரெட்டியின் ஜாமீன் மனுவை விசாரித்த நெல்லூர் லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம், அதனை அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தில், லட்டு பிரசாதத்திற்காக விநியோகம் செய்யப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த புகார் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT), இந்த விவகாரத்தில் இதுவரை 14 பேரைக் கைது செய்துள்ளது. இந்தச் சூழலில், வழக்கில் 34-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள தேவஸ்தான அதிகாரி விஜயபாஸ்கர் ரெட்டி அளித்துள்ள வாக்குமூலம், இந்த மாபெரும் முறைகேட்டை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டியுள்ளது.
இதையும் படிங்க: நம்ம ஊரு காத்து எப்படி இருக்கு? இனி டிஜிட்டல் போர்டுல லைவ் அப்டேட்.. சென்னை மாநகராட்சியின் சூப்பர் பிளான்!
தன்னுடைய வாக்குமூலத்தில் விஜயபாஸ்கர் ரெட்டி, நெய்யைப் பரிசோதனை செய்த போதே அதில் கலப்படம் இருப்பதை தான் அறிந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இது குறித்து நெய் விநியோகம் செய்த நிறுவனங்களிடம் கேள்வி எழுப்பிய போது, அவர்கள் தனக்குத் தொடர்ந்து லஞ்சம் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார். இதற்காக 2023-ம் ஆண்டில் மட்டும் 'போலே பாபா' நெய் நிறுவனத்திடம் இருந்து 75 லட்சம் ரூபாயும், 'பிரிமியர்' நிறுவனத்திடம் இருந்து 8 லட்சம் ரூபாயும் என மொத்தம் 83 லட்சம் ரூபாயைத் தான் லஞ்சமாகப் பெற்றதாக அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். அதிகாரிகளின் இந்தத் துரோகத்தால் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்குச் சுமார் 118 கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
குற்றத்தை அவரே சுயமாக ஒப்புக்கொண்ட நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையைப் புண்படுத்திய இந்த ஊழலில், லஞ்சம் வாங்கியதை ஒப்புக்கொண்டவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என நீதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்தார். இந்த வாக்குமூலம் தற்போது இந்த ஊழலில் தொடர்புடைய மற்ற உயர் அதிகாரிகள் மற்றும் விநியோகஸ்தர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்தகட்டக் கைது நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: வதந்திகளுக்கு எண்டு கார்டு! பாராசிட்டமால் மாத்திரையால் ஆட்டிசம் வராது.. 'The Lancet' மருத்துவ இதழ் அறிக்கை!