உலக வர்த்தக அரங்கில் புதிய சரித்திரம் படைத்த அரசு! ஐரோப்பாவுடன் கைகோர்க்கும் இந்தியா..!
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான நீண்டகாலக் கனவான ‘தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்’ (FTA) வரும் ஜனவரி 27-ஆம் தேதி புதுடெல்லியில் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்தாக உள்ளது.
உலக மக்கள்தொகையில் சுமார் 25 சதவீதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தப் பிரம்மாண்ட ஒப்பந்தம், ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை மேற்கொண்டதிலேயே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தமாகக் கருதப்படுகிறது. சுமார் 20 ஆண்டுகாலப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு எட்டப்பட்டுள்ள இந்த உடன்படிக்கை, இரு தரப்பு பொருளாதார உறவுகளில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்தியாவின் ஜவுளி, ஆடை மற்றும் தொழில்நுட்பத் துறைகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் அதே வேளையில், இந்திய விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில் விவசாயப் பொருட்கள் இந்த ஒப்பந்தத்திலிருந்து முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டுள்ளன.
ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மூடிய கதவுப் பேச்சுவார்த்தையில் இந்த ஒப்பந்தத்தின் இறுதி விபரங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். "விவசாயப் பொருட்கள் இல்லாமல் (Without Agriculture) இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது; இது ஆரம்பத்திலிருந்தே எங்களது தெளிவான முடிவாக இருந்தது" என அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 44 சதவீத தொழிலாளர்கள் விவசாயத்தைச் சார்ந்து இருப்பதால், ஐரோப்பிய விவசாயப் பொருட்களின் வருகை இந்திய விவசாயிகளைப் பாதிக்கும் என்ற அச்சத்தைப் போக்கவே இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அனைத்து உணவு மற்றும் பானங்களும் இதில் தவிர்க்கப்படவில்லை. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒயின் (Wine) மற்றும் மதுபானங்கள் (Spirits) மீதான 150 சதவீத இறக்குமதி வரியைக் குறைக்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. அதேபோல், இந்தியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடை மற்றும் ஜவுளிகள் மீதான 8% முதல் 12% வரையிலான வரி நீக்கப்படும் என்பதால், வங்கதேசம் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுடன் இந்தியா இனி சமமாகப் போட்டியிட முடியும். பிரதமர் மோடி, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் முன்னிலையில் ஜனவரி 27-ஆம் தேதி நடைபெறும் உச்சிமாநாட்டில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் இறுதி செய்யப்பட உள்ளது.
இதையும் படிங்க: 6 மாசத்துல 30,000 பேர்.. 2026-லயும் பணிநீக்கம் தொடரும்! TCS கொடுத்த ஷாக் அப்டேட்!
இதையும் படிங்க: சுற்றுலாவில் நம்பர் 1 தமிழகம் தான்! 33 கோடி சுற்றுலா பயணிகள் வருகை; அமைச்சர் ராஜேந்திரன் பெருமிதம்!