×
 

ஏஐ எதிர்காலத்தை இந்தியா - பிரான்ஸ் இணைந்து கட்டமைக்கும்!! அதிபர் இமானுவேல் மேக்ரான் உறுதி!

ஏஐ எதிர்காலத்தை இந்தியா மற்றும் பிரான்ஸ் இணைந்து கட்டமைக்கும் என்று பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

டெல்லி பாரத மண்டபத்தில் நடைபெற்று வரும் சர்வதேச ஏஐ (செயற்கை நுண்ணறிவு) உச்சிமாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “ஏஐ தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை இந்தியாவும் பிரான்ஸும் இணைந்து கட்டமைக்கும்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேக்ரான் பேசியதாவது: “10 ஆண்டுகளுக்கு முன்பு 140 கோடி மக்களை டிஜிட்டல் பொருளாதாரத்துக்குள் கொண்டு வர முடியாது என்று உலகம் கூறியது. ஆனால் இந்தியா அதை சாதித்து காட்டியுள்ளது. ஏஐ-யை பெரிய நிறுவனங்களும் பெரிய நாடுகளும் மட்டுமே கையாள முடியும் என்ற கருத்து தவறு.

இந்தியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் புதுமை, தொழில்நுட்பம், மனிதாபிமானத்தை இணைத்து ஏஐ-யின் எதிர்காலத்தை உருவாக்கும். இந்தியா உலகில் வேறு எந்த நாடும் செய்யாததை சாதித்துள்ளது. மாதந்தோறும் ரூ.2,000 கோடி பரிவர்த்தனைகள் நடக்கும் UPI அமைப்பு, 50 கோடி டிஜிட்டல் சுகாதார அடையாள அட்டைகள் போன்றவை அதற்கு சான்று.”

இதையும் படிங்க: பிரதமர் மோடியை சந்தித்தார் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை! ஏஐ வளர்ச்சி குறித்து ஆலோசனை!! டெல்லி மாநாட்டில் ருசிகரம்!

மேலும், “குழந்தைகளையும் பதின்ம வயதினரையும் பாதுகாக்கும் முயற்சியில் நீங்கள் (பிரதமர் மோடி) இணையப் போகிறீர்கள்” என்று குறிப்பிட்டார். இதன் மூலம் 15 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் மத்திய அரசின் திட்டத்தை அவர் சூசகமாக பாராட்டினார். பிரான்ஸில் ஏற்கனவே 15 வயதுக்குட்பட்டோருக்கு சமூக வலைதள தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த உச்சிமாநாட்டில் எஸ்தோனியா அதிபர் அலர் கரிஸ், ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், உலகின் முன்னணி டெக் நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தியாவின் டிஜிட்டல் வெற்றியை மேக்ரான் புகழ்ந்தது உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏஐ தொழில்நுட்பத்தை மனித நேயத்துடன், பொறுப்புடன் பயன்படுத்துவதில் இந்தியா-பிரான்ஸ் இணைந்து முன்னோடியாக இருக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. இந்த அறிவிப்பு தமிழக இளைஞர்களுக்கும் பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது. ஏஐ-யின் எதிர்காலத்தில் இந்தியா முன்னணி வகிக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது!

இதையும் படிங்க: டெல்லி ஏஐ உச்சி மாநாடு!! பிரதமர் மோடி துவக்கி வைப்பு!! இந்தியாவில் குவியும் உலகத்தலைவர்கள்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share