×
 

வந்திருச்சு க்ளைமாக்ஸ்!! இறுதிகட்டத்தை எட்டியது நக்சல் ஒழிப்பு! அமித்ஷா தீவிர நடவடிக்கை!

மாவோயிஸ்ட் தளபதி கணேஷ் என்கவுன்டரில் கொல்லப்பட்டது, நக்சல் ஒழிப்பு நடவடிக்கையின் முக்கிய திருப்புமுனை. இதன் வாயிலாக, நக்சல்கள் இல்லாத மாநிலமாக மாறும் சூழலை ஒடிஷா எட்டியுள்ளது என அமித்ஷா கூறினார்.

புவனேஸ்வர்: ஒடிஷா மாநிலம் காந்தமால் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், தடை செய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்பின் மத்திய குழு உறுப்பினரும் ஒடிஷா பொறுப்பாளருமான கணேஷ் உய்கே (69) உள்பட ஆறு நக்சல்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நக்சல் ஒழிப்பு நடவடிக்கைக்கு மிகப்பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

காந்தமால் - கஞ்சம் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அடர்ந்த வனத்தில் நக்சல்கள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஒடிஷா போலீசின் சிறப்பு அதிரடிப் படை (எஸ்ஓஜி), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்), எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) ஆகியவை இணைந்து தேடுதல் வேட்டை நடத்தின. 

டிசம்பர் 24ஆம் தேதி இரவு பெல்கா பகுதியில் தொடங்கிய மோதலில் இரு நக்சல்கள் கொல்லப்பட்டனர். மறுநாள் (டிசம்பர் 25) அதிகாலை சகாபத் பகுதியில் மீண்டும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரு பெண்கள் உள்பட நான்கு நக்சல்கள் உயிரிழந்தனர்.

இதையும் படிங்க: அமித் ஷா - நிதீஷ் குமார் திடீர் சந்திப்பு!! டெல்லி அரசியலில் மீண்டும் பரபரப்பு!

கொல்லப்பட்டவர்களில் கணேஷ் உய்கேயின் தலைக்கு 1.1 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கடந்த 40 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தார். மற்றவர்களின் அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. அவர்களிடமிருந்து இன்சாஸ் ரைஃபிள்கள் உள்பட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இச்சம்பவம் குறித்து ஒடிஷா கூடுதல் டிஜிபி சஞ்சீவ் பாண்டா கூறுகையில், “கணேஷ் உய்கே கொல்லப்பட்டது நக்சல் ஒழிப்புக்கு மிகப்பெரிய வெற்றி. தேடுதல் வேட்டை தொடரும்” என்றார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இதை “நக்சல் இல்லா இந்தியாவை நோக்கிய முக்கிய மைல்கல்” என்று புகழ்ந்தார். அவர் வெளியிட்ட செய்தியில், “காந்தமாலில் நடந்த பெரிய நடவடிக்கையில் மத்திய குழு உறுப்பினர் கணேஷ் உய்கே உள்பட 6 நக்சல்கள் ஒழிக்கப்பட்டனர். 

இந்த பெரும் வெற்றியால் ஒடிஷா நக்சல் இல்லா மாநிலமாக மாறும் நிலையை எட்டியுள்ளது. 2026 மார்ச் 31க்குள் நக்சலிசத்தை முழுமையாக ஒழிப்போம் என்ற உறுதியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

நாடு முழுவதும் நக்சல் நடமாட்டத்தை 2026 மார்ச்சுக்குள் முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், சத்தீஸ்கர், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்தடுத்து உயர்மட்ட நக்சல் தலைவர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். எஞ்சியுள்ள முக்கிய தலைவர் தேவுஜியைப் பிடிக்க தேடுதல் தீவிரமடைந்துள்ளது. இதனால் நக்சல் இயக்கம் பலவீனமடைந்து, பலர் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அமித்ஷாவுடனான சந்திப்பு… உத்தேச பட்டியல் கொடுத்தேனா?... நயினார் நாகேந்திரன் பேட்டி…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share