×
 

பிரதமர் மோடி வீடியோ நீக்கப்பட்ட விவகாரம்! மன்னிப்பு கோரினார் மார்க் ஸூக்கர்பெர்க்! மெட்டாவுக்கு எச்சரிக்கை!

ஃபேஸ்புக் சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து பிரதமா் நரேந்திர மோடியின் விடியோ தற்காலிகமாக நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் தலைவா் ஸூக்கா்பொ்க் மன்னிப்புக் கோரியுள்ளாா்.

பிரதமர் நரேந்திர மோடியின் ஃபேஸ்புக் வீடியோ தற்காலிகமாக நீக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸூக்கர்பெர்க் தரப்பில் மன்னிப்பும் வருத்தமும் தெரிவிக்கப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நீட் தேர்வு தொடர்பாக நடைபெற்ற மாணவர் போராட்டங்களை முன்னிட்டு, மாணவர்களிடம் அமைதியை வலியுறுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த மாதம் 23-ஆம் தேதி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ சில மணி நேரத்திற்கு ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட்டு, சுமார் ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் வெளியிடப்பட்டது. இந்த சம்பவம் அரசியல் மற்றும் சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியது. அதன் பேரில், நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு முன் மெட்டா நிறுவன அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போது, மார்க் ஸூக்கர்பெர்க் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குழு வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியது.

இதையும் படிங்க: பிரதமர் மோடி வீடியோ நீக்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம்! மெட்டா குழுவை நேரில் அழைத்த மத்திய அரசு!

மேலும், குறிப்பிட்ட காலத்திற்குள் மன்னிப்பு கோரப்படாவிட்டால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 79(3)-ன் கீழ் சமூக வலைத்தளங்களுக்கு வழங்கப்படும் 'பாதுகாப்பு சலுகை' (Safe Harbour) குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை மெட்டாவின் சர்வதேச விவகாரங்கள் குழு, அதன் தலைவர் ஜோயல் கப்லான் தலைமையில் சந்தித்தது. அப்போது, மோடி வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், மெட்டா தளங்களின் செயல்பாட்டில் சில குறைபாடுகள் இருப்பதையும் அக்குழு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

அதேபோல், சிறார் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வீடியோக்கள், டீப்-ஃபேக் போலி வீடியோக்கள் மற்றும் சட்டவிரோத பதிவுகளை கட்டுப்படுத்துவதில் போதிய வெற்றி கிடைக்கவில்லை என்றும், குறிப்பிட்ட சில பதிவுகள் பணம் பெற்று விளம்பரப்படுத்தப்படுகின்றன என்றும் மெட்டா தரப்பு ஒப்புக்கொண்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக மெட்டா நிறுவன அதிகாரிகள் மீண்டும் நாடாளுமன்ற நிலைக்குழு முன் ஆஜராக அழைக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இந்த தகவல்கள் மத்திய அரசு வட்டாரங்கள் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் வெளியாகியுள்ளன. மெட்டா நிறுவனம் இதுகுறித்து தனியாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளதா என்பது தெளிவாகவில்லை.

இதையும் படிங்க: பிரதமர் மோடி தொடர்பான போலி வீடியோக்கள்!! மெட்டா இந்தியா தலைவர் மீது போலீஸ் வழக்கு! விசாரணை தீவிரம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share