காலி மது பாட்டில்கள் திட்டம்: "இது கூடுதல் சுமைதான்''.. 'நமது துறை' என்று செயல்பட அமைச்சர் முத்துசாமி வேண்டுகோள்!
காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் விவகாரத்தை 'பொது நோக்கத்தோடு' பார்க்க வேண்டும் என்றும், இதில் டாஸ்மாக் பணியாளர்களுக்குள்ள சிரமத்தை ஒப்புக்கொள்வதாகக் கூறிய அமைச்சர் முத்துசாமி, ஊழியர்கள் 'நமது துறை' என்று செயல்பட வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் விவகாரத்தை 'பொது நோக்கத்தோடு' பார்க்க வேண்டும் என்றும், இதில் டாஸ்மாக் பணியாளர்களுக்குள்ள சிரமத்தை ஒப்புக்கொள்வதாகவும் கூறிய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி, ஊழியர்கள் இந்த வேலையை 'நமது துறை' என்று உணர்ந்து செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெஈரோடு திண்டலில் உள்ள தனியார் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு, தகுதி பெற்றவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் முத்துசாமி, காலி மது பாட்டில்கள் திரும்பப் பெறுவது குறித்துப் பேசினார்.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டது என்றும், காலாவகாச அடிப்படையில் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். காலி மது பாட்டில்களை வெளியே போடுவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், நீலகிரியில் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதால் பாட்டில்களைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: டிட்வா புயல் பாதிப்பு: பாதிக்கப்பட்ட இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண உதவி!
டாஸ்மாக் பணியாளர்களின் சிரமங்கள் குறித்துப் பேசிய அவர்: "காலி மது பாட்டில்கள் திரும்பப் பெறுவதில் டாஸ்மாக் பணியாளர்களுக்குக் கூடுதல் பணிச்சுமை இருப்பதை ஒப்புக்கொள்கிறோம். ஆனால், இதனை வேறு மாதிரியாகச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கிறோம். அதுவரை இதைச் சிரமப்பட்டுதான் செய்ய வேண்டும். இதை 'நமது துறை' என உணர்ந்து பணியாளர்கள் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளேன்."
தொழிற்சங்கங்களுடனும், தொழிலாளர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருப்பதாகவும், ஊழியர்களின் சிரமத்தைத் தீர்க்க என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதற்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் அமைச்சர் முத்துசாமி கூறினார். பாட்டில்கள் வைப்பதற்கான இடப் பற்றாக்குறை காரணமாக, ஒரு இடத்தில் ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு இருமுறை சென்று பாட்டில்களை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும், இதுபோன்ற சில பிரச்சனைகளைத் தீர்க்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இறுதியாக, டாஸ்மாக் ஊழியர்களும் துறையும் இணைந்து சிறப்பாகச் செயல்பட்டு, நீதிமன்ற உத்தரவை முறையாக நடைமுறைப்படுத்தவும், பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லாத வகையில் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி உறுதி அளித்தார்.
இதையும் படிங்க: கனமழை விடுமுறையை ஈடு செய்ய நடவடிக்கை: நாளை (டிச. 6) சென்னை பள்ளிகள் செயல்படும்!