×
 

மேற்காசியப் போர் எரிபொருள் நெருக்கடியை உருவாக்கும்?! பிரதமர் மோடி கவலை!! தேர்தல் கூட்டத்தில் விவாதம்!

வேட்பாளர்களை தேர்வு செய்ய நடந்த, பா.ஜ., மத்திய தேர்தல் கமிட்டி கூட்டத்தில், மேற்காசிய போரால் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்னை பற்றி, பிரதமர் மோடி விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் கடந்த 18ம் தேதி இரவு 7 மணிக்கு பாஜக மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. புதுச்சேரி, கேரளம், அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் சட்டசபைத் தேர்தல்களுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வதே இந்தக் கூட்டத்தின் நோக்கம். தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தவிர மற்ற மாநிலங்களுக்கான பெயர்களை இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி கடும் பணிச் சுமையில் இருப்பதால் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் என்று பாஜக நிர்வாகிகள் எதிர்பார்த்தனர். ஆனால், திட்டமிட்டபடி சரியான நேரத்தில் கூட்டத்துக்கு வந்த மோடி, ஒவ்வொரு தொகுதிக்கும் மாநிலத் தலைவர்கள் பரிந்துரைத்த வேட்பாளர்கள் பெயரை கேட்டதும் தன் கருத்தை விரிவாகத் தெரிவித்தார். 

புதிய முகங்களைத் தேர்வு செய்ததற்கான காரணம், முந்தைய வேட்பாளர்கள் மீதான அதிருப்தி, அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்காதது உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பினார். சில பெயர்களைச் சுட்டிக்காட்டி, “இவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாமே” என்றும் விசாரித்தார். கூட்டம் முழுவதும் அவர் தொடர்ந்து குறுக்கிட்டு ஆலோசனை வழங்கினார்.

இதையும் படிங்க: ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர்! இந்திய விமான நிறுவனங்களுக்கு பறந்த ஹை அலர்ட்!

முக்கியமாக, மேற்காசியப் போர் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி குறித்து பிரதமர் மோடி விரிவாக விவாதித்தார். சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட நாடுகளின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தித் தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 

இதனால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி பல உலகத் தலைவர்களுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும், சர்வதேச அரசியல் நிபுணர்கள், எண்ணெய் வர்த்தக நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

140 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட இந்தியாவுக்கு எரிபொருள் தேவை மிக அதிகம். கச்சா எண்ணெய் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயரும் அபாயம் உள்ளது. 

இந்த நெருக்கடியை மக்களுக்கு அதிக பாதிப்பின்றி எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து பாஜக தலைவர்களிடம் மோடி கவலையுடன் பகிர்ந்துகொண்டார். இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் அவர் உறுதியளித்தார்.

தேர்தல் களத்தில் இருக்கும் இந்த நேரத்தில் எரிபொருள் விலை உயர்வு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தக்கூடும் என்பதை உணர்ந்தே பிரதமர் இந்த விவகாரத்தை கூட்டத்தில் முன்வைத்தார். அடுத்த மாதம் நடக்கும் தேர்தல்களில் இந்தப் பிரச்னை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: பிரதமர் மோடியே பீதியில இருக்காரு! மக்களை பயப்பட வேணாம்னு சொல்றாரு! ராகுல்காந்தி கிண்டல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share