76 வயதிலும் இப்படி ஒரு சுறுசுறுப்பா? ஜி20 மாநாடு முடிந்ததும் மோடி அடுத்த மூவ்! தலைவர்கள் பாராட்டு!
சுப்ரீம் கோர்ட் புதிய தலைமை நீதிபதி சூர்யகாந்த் பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
தென் ஆப்பிரிக்காவின் ஜோஹான்ஸ்பர்க்கில் நவம்பர் 21 முதல் 23 வரை நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தீவிரமாக கலந்து கொண்டார். இது ஆப்பிரிக்க கண்டத்தில் முதல் முறையாக நடைபெறும் ஜி-20 மாநாடு என்பதால், உலகின் முன்னணி பொருளாதார நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை நிற மக்களுக்கு இனப் பாகுபாடு உள்ளதாகக் கூறி இந்த மாநாட்டைப் புறக்கணித்தார்.
தென் ஆப்பிரிக்க அதிபர் சிறில் ராமபோசா அமெரிக்காவை எதிர்மறையாகப் பற்றி பேசியதை டிரம்ப் கண்டித்ததே இந்த முடிவுக்கு காரணம் என்று தெரிகிறது. இருப்பினும், அமெரிக்காவின் புறக்கணிப்பையும் மீறி, மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்கள் ஒரு முக்கிய பிரகடனத்தை ஏற்றுக்கொண்டனர்.
மாநாட்டின் பல்வேறு அமர்வுகளில் பிரதமர் மோடி உரையாற்றினார். செயற்கை நுண்ணறிவு (ஏஐ) போன்ற தொழில்நுட்பங்கள் உலக மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் மாற்றப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இது குறிப்பிட்ட ஒரு நாட்டை மையமாகக் கொண்டதல்ல, உலகளாவிய முறையில் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: ஆப்ரிக்காவின் முதல் G20 உச்சி மாநாடு! பிரதமர் மோடி முன்மொழிந்த முன்னெடுப்புகள்!!
நிலையான வளர்ச்சி, பருவநிலை சவால்களை எதிர்கொள்ள இலக்குகள், உலகளாவிய சமத்துவம், சீர்திருத்த நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து மாநாட்டு பிரகடனம் தயாரிக்கப்பட்டது. பயங்கரவாதத்தின் எந்த வடிவத்திலும் வந்தாலும் அதை கண்டிப்பது, ஜி-20 நாடுகள் ஒன்றுபட்டு பயங்கரவாதத்தை ஒழிப்பது போன்ற பிரதமர் மோடியின் யோசனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
மாநாட்டின் இடைவெளியில் பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்க அதிபர் சிறில் ராமபோசாவை சந்தித்தார். வர்த்தகம், முதலீடு, அரிய வகைக் கனிமங்கள் இறக்குமதி, செயற்கை நுண்ணறிவு தொடர்பாக இருவரும் முக்கியமான பேச்சுவார்த்தை நடத்தினர்.
இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியுடன் சந்தித்தபோது, பயங்கரவாதத்துக்கு நிதி பெறுவதைத் தடுக்க இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதாக தீர்மானித்தனர். ஜப்பான் பிரதமர் சனே டகைச்சி, கனடா பிரதமர் மார்க் கார்னி உள்ளிட்ட பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து மோடி விவாதித்தார். இந்த சந்திப்புகள் இந்தியாவின் உலகளாவிய தொடர்புகளை மேலும் வலுப்படுத்தியுள்ளன.
மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய தென் ஆப்பிரிக்காவை பிரதமர் மோடி பாராட்டினார். சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் அவர் கூறியது: "ஜோஹான்ஸ்பர்க்கில் ஜி-20 மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. உலகின் நிலையான வளர்ச்சிக்கு இது வழிவகுக்கும். உலகத் தலைவர்களுடன் நடந்த எனது சந்திப்புகள் மிகப் பயனுள்ளதாக இருந்தன.
பல்வேறு நாடுகளுடன் இந்தியாவின் இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்தும் வகையில் மாநாடு அமைந்தது. ஜி-20 உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்த தென் ஆப்பிரிக்காவின் அற்புதமான மக்கள், அதிபர் சிறில் ராமபோசா மற்றும் அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டார். உலகின் சிறப்பான எதிர்காலத்துக்கு கூட்டு முயற்சி அவசியம் என்பதை இம்மாநாடு வலியுறுத்தியது என்றும் அவர் சொன்னார். மாநாட்டின் சில முக்கிய நிகழ்வுகளை வீடியோவாக வெளியிட்டிருந்தார்.
நவம்பர் 24 காலை, தென் ஆப்பிரிக்கா பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி டில்லி திரும்பினார். 76 வயதிலும் அவரது சுறுசுறுப்பைப் பார்த்து அனைவரும் வியந்தனர். இந்தியா திரும்பிய உடனேயே அவர் ஓய்வெடுக்கவில்லை. நேரடியாக ஜனாதிபதி மாளிகைக்குச் சென்று, சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதி சூர்யகாந்தின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள், நீதிபதிகள் அனைவரும் பங்கேற்றனர். பிரதமரின் இந்த சுறுசுறுப்பு அனைவரையும் பாராட்ட வைத்தது.
இதையும் படிங்க: மோடி ப்ரசண்ட்! ட்ரம்ப் ஆப்சென்ட்!! தென்னாப்ரிக்கா ஜி 20 உச்சிமாநாடு! சூடுபிடிக்கும் சர்வதேச அரசியல்!