அடுத்த அதிர்ச்சி... திகுதிகுவென தீப்பற்றி எரிந்த ஸ்லீப்பர் பேருந்து... 70 பயணிகளின் கதி என்ன?
லக்னோவில் ஆக்ரா விரைவுச் சாலையில் பயணித்த ஏசி பேருந்து தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் ஏற்பட்ட பேருந்து விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. ஆக்ரா விரைவுச்சாலையில் பயணித்த ஏசி பேருந்து திடீரென தீப்பிடித்தது. சில நிமிடங்களில், தீ மிகவும் பயங்கரமாக பேருந்து முழுவதும் பரவியது. தீ மிகவும் கடுமையானதாக இருந்ததால், புகை இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை தெரிந்தது. ஆச்சரியப்படும் விதமாக, விபத்து நடந்த நேரத்தில் பேருந்துக்குள் இருந்த 70 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.
உயிரிழப்பு ஏற்படவில்லை:
வடமாநிலங்களில் சத் பூஜா விழாவிற்காக மக்கள் தயாராகி வருகின்றனர். இதனால் சொந்த ஊருக்குச் செல்லும் பயணிகளின் கூட்டம் பேருந்துகளிலும், ரயில்களிலும் அலைமோதுகிறது. டெல்லியில் இருந்து கோண்டா செல்லும் பேருந்தில் சத் பூஜா விழாவிற்காக சென்ற பயணிகள் பயணித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை ககோரி காவல் நிலையப் பகுதியில் உள்ள எக்ஸ்பிரஸ்வேயில் உள்ள சுங்கச்சாவடி அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென டயர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
இதையும் படிங்க: கவுண்டவுன் ஸ்டார்ட்...!! ஆட்டத்தை ஆரம்பித்த ‘மோந்தா’ புயல்... துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்...!
உடனடியாக சுதாரித்துக் கொண்ட பயணிகள் பேருந்தை விட்டு வெளியேறினர். அங்கிருந்தவர்கள் எவ்வளவு முயன்றும் தீயைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில், காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் பேருந்து முற்றிலும் தீக்கிரையானது.
பேருந்து விபத்து நடந்தது எப்படி?
விபத்து நடந்தபோது அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததாக பயணிகள் தெரிவித்தனர். பேருந்து மணிக்கு 80 முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. அந்த நேரத்தில், பின்புற டயர் திடீரென வெடித்தது. ஒரு பெரிய சத்தமும் பலத்த அதிர்வையும் அடுத்து பயணிகள் அனைவரும் திடுக்கிட்டு விழித்தனர். பின்புறத்திலிருந்து புகை வருவதைக் கண்ட பயணிகள் பீதியடைந்து அலறத் தொடங்கினர். ஓட்டுநர் உடனடியாக பிரேக் போட்டு, அனைவரையும் விரைவாக பேருந்திலிருந்து இறங்கச் சொன்னார். பலர் தங்கள் உடைமைகளை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டனர். சிறிது நேரத்திலேயே, புகை தீப்பிழம்புகளாக மாறி பேருந்து முழுவதும் பரவியதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வீட்டு வேலை செய்யமாட்டியா? கணவன் கழுத்தில் கத்தியை இறக்கிய மனைவி...! பயங்கரமான ஆளு தான் போல...!