நீட் வினாத்தாளை கசியவிட்டது தேர்வு நிபுணர்கள்? சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்!
'நீட்' தேர்வு வினாத்தாளை, தேர்வை நடத்திய தேர்வாணைய வல்லுநர்களே கசியவிட்டது, சி.பி.ஐ.,யின் குற்றப்பத்திரிகை வாயிலாக தெரியவந்துள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில், தேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பு பணியில் ஈடுபட்ட நிபுணர்களே கேள்விகளை வெளியே எடுத்துச் சென்றதாக சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஹரியானா, பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் இடைத்தரகர்கள் மூலம் இந்த முறைகேடு நடந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து தேர்வு தொடர்பாக பெரும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வந்தது.
இந்த வழக்கில் 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 94 பக்க குற்றப்பத்திரிகையில், வினாத்தாள் தயாரிக்கப்பட்ட விதம் மற்றும் அது வெளியே சென்றதாகக் கூறப்படும் வழிமுறைகள் குறித்து விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிங்க: தமிழகத்தின் நீட் டாப்பர்! தேசிய அளவில் 12வது இடம்... யார் இந்த வெங்கடபதி வேலாயுதம்?
டெல்லியின் ஓக்லா பகுதியில் உள்ள என்.டி.ஏ. அலுவலகத்தின் ரகசிய பிரிவில் வினாத்தாள் தயாரிப்பு பணிகள் நடைபெற்றதாக சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களுக்கு தனித்தனி நிபுணர்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், பின்னர் வினாத்தாள்கள் பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபட்ட சில பேராசிரியர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட வெற்று காகிதங்களில் கேள்விகள் மற்றும் விடைகள் தொடர்பான குறிப்புகளை எழுதி வெளியே எடுத்துச் சென்றதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிலர் தங்குமிடங்களுக்கு சென்ற பிறகும் கேள்விகள் தொடர்பான குறிப்புகளைத் தயாரித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
ரகசிய பிரிவில் 24 மணி நேர கண்காணிப்பு கேமரா இல்லாததும், நுழையும் மற்றும் வெளியேறும் நிபுணர்களிடம் போதிய சோதனை நடத்தப்படாததும் பாதுகாப்பு குறைபாடுகளாக இருந்ததாக சி.பி.ஐ. கூறியுள்ளது. இந்தக் குறைபாடுகளை பயன்படுத்தி கேள்விகள் வெளியே சென்றதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் இந்தக் கேள்விகள் இடைத்தரகர்கள் மூலம் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்ட தேர்வு பயிற்சி மையங்கள் மற்றும் மாணவர்களிடம் சென்றதாகவும், சில மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் இருந்து பணம் வசூலிக்கப்பட்டதாகவும் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளது. அதிகபட்சமாக ரூ.12 லட்சம் வரை பணம் கைமாறியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கேள்விக் குறிப்புகள் மற்றும் மின்னணு சாதனங்கள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டதாகவும், அவற்றின் அடிப்படையில் முறைகேட்டுடன் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்ததாகவும் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
இதனால், நீட் வினாத்தாள் கசிவு என்பது வெளியில் இருந்து மட்டும் நடத்தப்பட்ட மோசடி அல்ல; வினாத்தாள் தயாரிப்பு மற்றும் மொழிபெயர்ப்பு பணியில் இருந்தவர்களின் செயல்பாடுகளும் இதில் முக்கிய பங்கு வகித்ததாக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை சுட்டிக்காட்டுகிறது. இந்த விவகாரம் தேர்வு பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மீண்டும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: டிரம்ப் கொள்கையால் அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களுக்கு புதிய சிக்கல்! 62% விசா சரிவு!